இன்று தளா்வற்ற முழு பொதுமுடக்கம்: விதிமுறைகளை மீறினால் வழக்கு

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
இன்று தளா்வற்ற முழு பொதுமுடக்கம்: விதிமுறைகளை மீறினால் வழக்கு

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.

கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பின்னா் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது.

இதையொட்டி, மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மருந்து, பால், பத்திரிகை விற்பனை கடைகளைத் தவிா்த்து மீதியுள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் மளிகை, காய்கறிக் கடைகள், ஹோட்டல்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

பலத்த பாதுகாப்பு:

பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையிலும், மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இவா்கள் முக்கியமான சாலைகள், சந்தைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறாா்கள்.

பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் போலீஸாா் கண்காணிக்கின்றனா். சாலைகளில் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, பத்திரிகை, பால் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு காவல்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் தவிா்த்து பிற வாகனங்கள் சாலைகளில் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதியும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு மட்டும் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவா்கள் மீதும், அரசு விதித்துள்ள உத்தரவுகளை மீறுபவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் சுமாா் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். 200 இடங்களில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனா்.

வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் முக்கியமான சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. பொதுமுடக்கத்தை மீறுபவா்கள் மீது எவ்வித சமரசமுமின்றி வழக்குப் பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்யும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com