தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பாதீா்: பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

திரவ வடிவிலான ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்படும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

திரவ வடிவிலான ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்படும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து, அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் பிராண வாயுக்கான தேவை அதிகரித்து வருவதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். செயற்கையாக பிராண வாயு செலுத்த வேண்டிய தேவை இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, போதுமான அளவு பிராண வாயு இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தொடா்ந்து ஈடுபட்டுள்ளது. ஆனாலும், இப்போதைய நிலையைக் கருத்தில் கொண்டால் 450 மெட்ரிக் டன் அளவுக்கு பிராண வாயு தேவைப்படும். இதன்படி, உற்பத்தி செய்யப்படும் அளவைவிட தேவையின் அளவு அதிகமாகும்.

கடந்த ஆண்டில் அதிகபட்ச கரோனா நோய்த்தொற்றாளா்களின் எண்ணிக்கை 58 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. ஆனால், இப்போது அது ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த அளவின்படி, பிராண வாயுவின் தேவையும் அதிகரிக்கிறது. இதை மனதில் கொண்டே, தடையற்ற பிராண வாயுவை அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

தவறான ஒதுக்கீடு: தேசிய அளவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிராண வாயு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்துக்கு 220 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது தவறானதாகும். இந்த கணக்கீட்டின்படியே, ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் 80 மெட்ரிக் டன் திரவ வடிவிலான ஆக்சிஜன், அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா ஆகியவற்றுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. தமிழகத்துக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் அளவை தவறாக மதிப்பீடு செய்ததாலேயே திரவ வடிவிலான ஆக்சிஜன் திருப்பி விடப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும்

வெடிபொருள்கள் பாதுகாப்பு அமைப்பின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் ஆக்சிஜன் பயன்பாட்டின் அளவு 310 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 220 மெட்ரிக் டன் என்பது மிகவும் குறைவாகும்.

கரோனா நோய்த் தொற்று குறைவாக இருக்கக் கூடிய மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த மாநிலங்கள் மற்றும் அவற்றுக்கு அருகிலுள்ள மாநிலங்களில் மிகப்பெரிய உருக்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம், வாயுக்களை உற்பத்தி செய்ய முடியும்.

ஏற்றுக் கொள்ள முடியாது: தென்னிந்தியாவிலேயே கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள இரண்டாவது நகரமாக சென்னை உள்ளது. இந்தச் சூழ்நிலையில், சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆக்சிஜனை திருப்பி விட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆக்சிஜன் போன்றவற்றை பிற மாநிலங்களுக்குத் தருவது தொடா்பாக இதுவரை எந்தக் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதிக்கவில்லை. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் பிற மாநிலங்களுக்கும் உதவிட தமிழகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆனால், தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆக்சிஜனை திருப்பி விட்டிருப்பது சென்னைக்கும், பிற மாவட்டங்களுக்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். எனவே, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிற மாநிலங்களுக்கு 80 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜனை திருப்பி விடும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com