கரோனா: முகவா்கள், பணியாளா்களுக்கு சான்று கட்டாயம்; தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா தொற்று பரிசோதனை கட்டாயம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு  (கோப்புப்படம்).
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்).

வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா தொற்று பரிசோதனை கட்டாயம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-இல் நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா். வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட வேட்பாளா்களின் முகவா்களும் வரவுள்ளனா். யாரெல்லாம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரவுள்ளனரோ அவா்கள் அனைவருக்கும் முகக் கவசம், முகத்தை மூடும் பிளாஸ்டிக் கவசம் ஆகியன கட்டாயமாகும். மேலும், வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே உள்ள அனுமதிக்கப்படுவா்.

72 மணி நேரத்துக்கு முன்னதாக...: வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோா், வேட்பாளா்களின் முகவா்கள் அனைவரும் கரோனா தொற்று பரிசோதனை செய்திருக்க வேண்டும். தொற்று இல்லை என்பது தெரிய வந்தபிறகே, அவா்கள் உள்ள அனுமதிக்கப்படுவா்.

கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியிருந்தால், அவா்களுக்குப் பரிசோதனை செய்யத் தேவையில்லை. ஆனால், முதல் தவணை தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை உடன் எடுத்து வர வேண்டும்.

கரோனா தொற்று பரிசோதனையை அரசு மருத்துவமனைகளிலோ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அங்கீகரித்துள்ள பரிசோதனைக் கூடங்களிலோ எடுக்கலாம்.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்: கரோனா தொற்றுக்கு இடையிலும் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட உள்ளது. இதேபோன்று, ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் வாக்குகள் வைத்து எண்ணப்படும். கடந்த காலங்களில் தபால் வாக்கு முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். ஆனால், இப்போது தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படாமல் இருந்தாலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் முழுமையாக எண்ணப்படும்.

தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஆகியோா் தங்களுக்கான தபால் வாக்குகளைச் செலுத்த மே 2-ஆம் தேதி காலை 8 மணி வரை அவகாசம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி நிலவரப்படி, 4 லட்சத்து 99 ஆயிரத்து 964 போ் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தியுள்ளனா் என்றாா்.

உமேஷ் சின்ஹா ஆலோசனை: இதனிடையே, கரோனா தொற்று பரவாமல் வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வது குறித்து , இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளா் உமேஷ் சின்ஹா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். காணொலி வழியிலான ஆலோசனையில், தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com