மானாமதுரை சித்திரை திருவிழா நிலாச்சோறு நிகழ்ச்சி ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம்

மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதன்கிழமை இரவு நடைபெற இருந்த நிலாச்சோறு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டடதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் வீர அழகருக்கு நடைபெற்ற திருமஞ்சன பூஜை
மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் வீர அழகருக்கு நடைபெற்ற திருமஞ்சன பூஜை


மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதன்கிழமை இரவு நடைபெற இருந்த நிலாச்சோறு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டடதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவின்போது ஆற்றில் அழகர் இறங்கும் உற்சவத்திற்கு மறுநாள் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் அழகர் பத்தி உலாத்தல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

இந்த மண்டகப்படிக்கு மானாமதுரை பகுதி மக்கள் நிலாச்சோறு மண்டகப்படி என்று பெயர் வைத்து அழைப்பார்கள்.

அன்றைய தினம் இரவு வீர அழகர் தனது கோவிலுக்குப் பின்புறம் வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அப்போது மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சைவ அசைவ உணவுகளை சமைத்துக் கொண்டு கார், வேன், லாரி மற்றும் பைக்குகளில் மானாமதுரை வைகை ஆற்றை நோக்கி படையெடுப்பார்கள்.

அங்கு சித்திரை மாதத்தின் நிலவு வெளிச்சத்தில் வைகை ஆற்றுக்குள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்கள் வட்டாரத்துக்கும் பரிமாறி சாப்பிட்டு மகிழ்ந்து இரவு பொழுது முழுவதையும் வைகை ஆற்றுக்குள்ளேயே கழித்து மறுநாள் காலை தங்களது வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

மானாமதுரை சித்திரை திருவிழாவில் புதன்கிழமை காலை திருமஞ்சனம் நடைபெற்று முடிந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வீர அழகர்.

மானாமதுரை பகுதி இறைச்சி கடைகளில் அன்றையதினம் சமைப்பதற்காக இறைச்சி வகைகள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும்.

பல ஆண்டு காலமாக மானாமதுரை சித்திரை திருவிழாவில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் ரத்து செய்யப்பட்ட சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறவில்லை.

 இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறும் என மானாமதுரை பகுதி மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இவர்களது நம்பிக்கையைபொய்யாக்கும் வகையில் தற்போது கரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளது. இதனால் வீர அழகர் கோயிலுக்குள்ளேயே சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் நடந்து வருகின்றது. 

திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து தொடர்ச்சியாக புதன்கிழமை இரவு வைகை ஆற்றுக்குள் மானாமதுரை கிராமத்தார்கள் மண்டகப்படியில் நடைபெற இருந்த நிலாச்சோறு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த மண்டகப்படியின்போது வீர அழகருக்கு செய்யப்படும் திருமஞ்சனம் உள்ளிட்ட வழக்கமான அலங்காரம் மற்றும் பூஜைகள் கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது.

இந்த ஆண்டும் மானாமதுரை பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சித்திரை திருவிழா நிலாச்சோறு மண்டகப்படி நிகழ்ச்சி ரத்தானதால் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com