அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்தில் திமுக மனு

அஞ்சல் வாக்குகளை முழுமையாக எண்ணி முடித்த பிறகே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எண்ண வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது.
அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்தில் திமுக மனு

சென்னை: அஞ்சல் வாக்குகளை முழுமையாக எண்ணி முடித்த பிறகே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எண்ண வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது.

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷில் சந்திராவுக்கும், தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கும் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-இல் நடைபெறும்போது, முதலில் அஞ்சல் வாக்குகளை எண்ணி அறிவித்த பிறகே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் அதற்கான உத்தரவுகளை மாவட்டத் தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தோம். ஆனால், இதுவரை அதற்கான உத்தரவுகள் தோ்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கையின்போது 500 அஞ்சல் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்கிற அளவில் அமைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தோ்தல் ஆணையத்துக்கு நாங்கள் எழுதிய கடிதத்தில் மேஜை சுற்றுகளை அதிகப்படுத்தி, கரோனா தொற்று காலத்தில் கால விரயம் செய்யாமல் விரைவாக எண்ணி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

மேலும், 500 அஞ்சல் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்கிற கணக்கு எல்லா வாக்கும் எண்ணும் மையங்களிலும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால், ஒரே மாதிரியான நடைமுறையை அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் கடைப்பிடிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணி முடித்து அறிவித்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எண்ணி அறிவிக்க வேண்டும் என்கிற உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com