23 ஆண்டுகளுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்களின்றி நடந்தது 

சீர்காழி அருகே நோய் தீர்க்கும் ஸ்தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடந்தது.
23 ஆண்டுகளுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்களின்றி நடந்தது 


சீர்காழி: சீர்காழி அருகே நோய் தீர்க்கும் ஸ்தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடந்தது. ராஜகோபுரங்கள் உட்பட 6 கோபுரங்கள், மூலவர் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.  கரோனா நோய்தொற்று அகன்றுவிடும் என பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதினத்திற்கு உள்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரிசுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். 

செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தகுளத்தில் நீராடி, வைத்தியநாதசுவாமி,தையல்நாயகி அம்பாளை வழிப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும் தீர்த்தமண்உருண்டையை 1 மண்டலம் சாப்பிட்டால் தீராத 4 ஆயிரத்து 448 வியாதிகள் தீரும் என்பது ஐதீகம். 

செவ்வாய் தோஷத்தால் திருமணதடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் செவ்வாய்க்கு பரிகாரபூஜைகள் செய்து வழிப்பாடு நடத்தினால் திருமணம் விரைவில் கைக்கூடும். இவ்வாறு பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் கடந்த 1998 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு இன்று நடந்தது. குடமுழுக்கு நடத்திட தீர்மானிக்கப்பட்டு முக்தியடைந்த தருமபுரம் ஆதினம் 26வது குருமகாசந்நிதானம் முன்னிலையில், 27வது குருமகாசந்நிதானம் பங்கேற்று கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாலயம் செய்விக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது . 

கோயில் ராஜகோபுரம், உள்பட நான்கு வீதி கோபுரங்கள், மூலவர் விமானங்கள், சுவாமி, அம்பாள், முத்தையா சுவாமி மேல்தளம் சீரமைப்பு, நீராழிமண்டபம், கிருத்திகை மண்டபம், கொடிமரம் பகுதி, பிரகாரங்கள் ஆகியவைர சீரமைக்கப்பட்டு,வர்ணங்கள் பூசும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

சித்தாமிர்த தீர்த்தகுளத்தில் சேதமடைந்த பகுதிகள் சீர்செய்யப்பட்டு அங்கும் வர்ணங்கள் பூசும் பணி தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. அனைத்து சுவாமி சன்னதிகள், சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் ஆகியவை பழமை மாறாமல் நவீன யுக்திகளை கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் முழுவதும் திருப்பணிகள் நிறைவடைந்து அனைத்து கோபுரங்கள்,மேல்தளங்களில் சுவாமி கோயில் வரலாறு விளக்கும் படங்களை ஓவியங்களாக வரைந்து குடமுழுக்கு விழா செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 8கால யாகசாலைபூஜைகள்  147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு அதில் 108 மூலிகை பொருட்கள் இட்டு நடந்து வந்தது. புதன்கிழமை காலை பரிவார யாகபூஜைகள் தொடங்கி,மகாபூர்ணாஹூதி, தீபாராதனை செய்விக்கப்பட்டு, யாகசாலைகளிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட சிவாச்சாரியார்களால் புறப்பாடு ஆகி, மேள,தாளங்கள் முழங்கிட கோயிலை வலம் வந்து ஆதிவைத்தியநாதர், வலஞ்சுழிவினாயகர், வீரபத்திரர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கைஅம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதி விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

தொடர்ந்து வியாழக்கிழமை காலை 8 ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம்வந்து கற்பகவினாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் மூலவர் விமானங்கள், 6 கோயில் கோபுரங்கள் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னியிலையில் நடைபெற்றது. 

இதில்  உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி  விக்ராந்த் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற  அரசு சிறப்பு வழக்குரைஞர் கார்த்திகேயன், மயிலாடுதுறை ஆட்சியர் வலிதா மயிலாடுதுறை எஸ்.பி ஸ்ரீநாதா மாவட்ட உரிமையியல் நீதிபதி  வெ.பார்கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டர். 

நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் யாரும் கோயில் உள்ளேயும் வெளிவட்ட சாலைகளிலும் அனுமதிக்கப்படவில்லை. கோயிலை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பக்தர்கள் மாடிகள் மீது ஏறி கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். சீர்காழி,மயிலாடுதுறை,சிதம்பரம் சாலை வாகன போக்குவரத்து மாற்றுபாதையில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com