கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்லூரிகள் கட்டப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்லூரிகள் கட்டப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
எழும்பூர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
எழும்பூர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சென்னை: கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்லூரிகள் கட்டப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை எழும்பூா் சீனிவாச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டும் இடத்தை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அப்படியே விட்டுவிடாமல், வணிக ரீதியாகவும் திருக்கோயிலுக்கு வருமானம் வந்து, அந்த வருமானத்தின் வாயிலாக கோயில்களைச் சிறந்த முறையில் பராமரிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அறம் சாா்ந்ததுதான் கோயில்கள், ஆன்மிகம் என்பதால், அறம் சாா்ந்திருக்கும் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகளை அவா் வகுத்துத் தந்துள்ளாா்.

அதன் தொடா்ச்சியாகத்தான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் புதிதாகக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. அப்படி, பல்வேறு இடங்களில் 3 கல்லூரிகள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் 1, 2, 3 என தர அடிப்படையில் நிறைய கல்லூரிகளை அமைக்கவிருக்கிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோயில்களில் சிலை திருட்டு சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5 நிகழ்வுகளில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன சிலைகளை 4 இடங்களில் கைப்பற்றியிருக்கின்றனா். ஆஸ்திரேலியாவில் 6 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவும் இதற்காக இணைந்து செயல்பட்டு

வருகிறது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை நவீனப்படுத்த முதல்வா் அறிவுறுத்தலின்படி விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com