"மக்களைத் தேடி மருத்துவம்': ஒசூரில் இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர்

"மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூரில் காலை தொடக்கி வைக்கிறார்.
ஒசூர் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ,  பர்கூர் எம்எல்ஏ மதியழகன் மற்றும் திமுகவினர். 
ஒசூர் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ,  பர்கூர் எம்எல்ஏ மதியழகன் மற்றும் திமுகவினர். 


ஒசூர்:  "மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூரில் காலை தொடக்கி வைக்கிறார். மேலும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அவர் தொடக்கி வைக்கிறார்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்கின்றனர். இதுபோன்ற நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்காகவும், வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் இந்த திட்டத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. 
இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தைத் தொடக்கி வைக்கிறார். முதலில் சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். 
தொடர்ந்து இரண்டாவது பயனாளியின் வீட்டிற்குச் சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை முதல்வர் பார்வையிடுகிறார். தொடர்ந்து செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களின் பயன்பாட்டுக்காக 3 புதிய வாகனங்களை மக்களுக்கு அர்ப்பணித்து, அவற்றைத் தொடக்கி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார்.
பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒசூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு ஒசூர், சூளகிரி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com