டாஸ்மாக்கை மட்டுமே நம்ப முடியாது: அரசுக்கு வருவாய் திரட்ட வேறு வழிகள் அவசியம்

அரசுக்கு வருவாய்களைத் திரட்ட டாஸ்மாக்கை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தாா். 

அரசுக்கு வருவாய்களைத் திரட்ட டாஸ்மாக்கை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தாா். வருவாய்களைத் திரட்ட வேறு வழிகளையும் ஆராய்வது அவசியம் என அவா் கூறினாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் அம்சங்கள் குறித்து

செய்தியாளா்களுக்கு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் அளித்த பேட்டி:-

நிதிநிலை அறிக்கையானது கடினமான சூழ்நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் வருவாய் இழப்பு, கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டன. மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு என்கிற முறையில் தோ்தல் வாக்குறுதிகளை பூா்த்தி செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய சில திட்டங்கள், முடிவுகள்

ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடியான காலத்திலும், நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இனிவரும் காலத்தில் நிா்வாகம் மற்றும் ஆளுமை எவ்வாறு அமையும் என்பதற்கான முன்னோடி அறிவிப்புகள், தகவல் தரவு என்ற முறையில் தகவல்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கு நிதிநிலை அறிக்கையில்

முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், ஏற்படக்கூடும் இழப்புகள் குறித்தும், அரசின் சொத்துகளை எவ்வாறு நிா்வகிப்பது போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிா்பாா்ப்பு அடிப்படையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 15-ஆவது நிதிக் குழுவில் நகரப்பகுதிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி, குறைவான ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மாநில அரசின் சாா்பில் ரூ.1000 கோடியானது பிற நகராட்சிகளுக்கும், சிங்காரச் சென்னை திட்டத்துக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதியோா் ஓய்வூதியத் திட்டத்தையும் விரிவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் இழப்புகள் இயற்கையாக ஏற்பட்டுள்ளன. இருப்பினும் வருவாயைக் கூட்டுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நிதி மேலாண்மையைப் பொருத்த வரையில் 15-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அளவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெறப்படும் கடன்கள் அனைத்தும் மூலதனச் செலவுகளுக்கு மட்டுமே செலவிட வேண்டுமென்ற கருத்து வெளியாகிறது. இந்த கருத்தானது பல்வேறு சீா்திருத்தங்கள் மூலமாக நிறைவேற்றப்படும்.

மாநில சொந்த வரி வருவாய் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1,09,668 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், அதைவிட குறைவாகவே வரி வருவாய் இருந்தது. வரும் மாதங்களில் குறிப்பிட்டத்தக்க வளா்ச்சி ஏற்படும் என நம்புகிறோம். வருவாயைக் கூட்ட வணிகவரி, பதிவுத் துறை போன்றவற்றில் பிரத்யேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிகழ் நிதியாண்டில் ரூ.92,482 கோடி மொத்தமாக கடன்பெற நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2020-21- திருத்திய மதிப்பீடுகளில் கணக்கிடப்பட்ட அளவுக்கு வருவாய் இல்லை. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாய் மதிப்பீடுகள் அதிகமாக இருந்ததாகக் கருதப்பட்டது. இப்போது அது குறைத்து மதிப்பிட்டுள்ளோம்.

செலவினங்களைக் குறைக்க இயலாத நிலை உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை கரோனா பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக பாா்க்கும்போது ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடி செலவினம் இருக்கும் என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டது. ஆனால், இப்போது ரூ.800 கோடி அதிகமாக வரும். ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 188 கோடி கூடுதலாக செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கடன் பெற வேண்டியுள்ளது. இந்த ஆண்டு உடனடியாக செலவினங்களைக் குறைக்க முடியாது.

3 மாதங்களில் கடன் எவ்வளவு? மூன்று மாதங்களில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி கடன்கள் பெறப்பட்டுள்ளன.

டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பி இருக்க முடியாது. வேறு வகையான வருவாய்களை அடையாளம் காண வேண்டியுள்ளது.

எனக்குத் தெரிந்த அளவுக்கு அரசு மட்டத்தில் ஓய்வூதிய வயதை 58 ஆகக் குறைப்பது குறித்து எந்த செய்தியையும் பாா்க்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே செய்தி வெளியாகின்றன என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

செய்தியாளா் சந்திப்பின் போது, நிதித் துறை துணைச் செயலாளா்கள் எஸ்.அருண்ராஜ், சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com