நாடு முழுவதும் 43 மத்திய அமைச்சர்கள் மக்களிடம் நேரில் ஆசி: எல்.முருகன்

பிரதமர் மோடி உத்தரவின் பேரில், புதிதாக பொறுப்பேற்ற 43 மத்திய அமைச்சர்களும் மக்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று வருகின்றார்கள்.
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரை கூட்டத்தில் பேசுகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரை கூட்டத்தில் பேசுகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.


நாமக்கல்: பிரதமர் மோடி உத்தரவின் பேரில், புதிதாக பொறுப்பேற்ற 43 மத்திய அமைச்சர்களும் மக்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று வருகின்றார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் கடந்த 16 ஆம் தேதி முதல் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்து ஆசி பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.

புதன்கிழமை காலை நாமக்கல் வந்த அவர் பரமத்தி ஒன்றியம் புதுப்பாளையத்தில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின் கோனூர் கிராமத்தில் உள்ள தனது தந்தை லோகநாதன், தாய் மருதாயம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்று அவர்களுடன் உணவு அருந்தினார். அதன்பின் தான் படித்த அரசுப் பள்ளியை பார்வையிட்டவர் நண்பர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில், ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

இதனைத் தொடர்ந்து நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். 

அப்போது, நாடு முழுவதும் புதிதாக பொறுப்பேற்ற 43 மத்திய அமைச்சர்களும், பிரதமர் மோடி உத்தரவின் பேரில் தங்களது மாநிலங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர். அந்த வகையில் மூன்று நாள் யாத்திரையை மேற்கொண்டுள்ளேன். பிரதமர் மோடி ஏழை எளிய மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிறுவயது முதலே பாஜகவில் இணைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பம் படிப்படியாக நிறைவேறியது. அதற்கு முக்கிய காரணம் வழக்குரைஞர் மனோகரன் மற்றும் அப்போதைய மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு முன் கிராமப் புறங்களில் வீடு கட்டுவது எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. கழிவறை கட்டுவதற்கே மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். தற்போது பிரதமர் மோடி ரூ.2 லட்சம் வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கி வருகிறார் என்றார். 

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இக் கூட்டத்தில் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி. ராமலிங்கம்,  வி.பி. துரைசாமி, மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் மனோகரன், கல்வியாளர் பிரணவ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com