திருப்புவனம் அருகே தீ மிதித்து மொகரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை இந்துக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து மொகரம் பண்டிகையை கொண்டாடினர்.
திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில் தீ மிதித்து மொகரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்.
திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில் தீ மிதித்து மொகரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்.



மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை இந்துக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து மொகரம் பண்டிகையை கொண்டாடினர்.

திருப்புவனம் அருகே உள்ள முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இக்கிராமத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் இங்குள்ள பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில் மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து காலப்போக்கில் முதுவந்திடல் கிராமத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். 

இதனால் முதுவந்திடல் கிராமத்தில் முஸ்லீம் மக்கள் கொண்டாடி வந்த மொகரம் பண்டிகையை பல ஆண்டுகளாக மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதையொட்டி மொகரம் பண்டிகைக்கு முன்னதாக கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு நேர்த்திகடன் நிறைவேற்ற விரதம் தொடங்கினர்.

மொகரம் பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு வெட்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெருப்புக் குண்டத்தில் விரதம் இருந்து வந்த இந்துக்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெண்கள் தலையில் துணியால் முக்காடு போட்டுக் கொண்டு நெருப்புக் கங்குகளை தலையில் அள்ளிக் கொட்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்துக்கள் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுவது குறித்து கிராம மக்கள் கூறுகையில், முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துக்களும் முஸ்லிம்களும் மத வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பின் கிராமத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேறியதால் அவர்கள் கொண்டாடி வந்த மொகரம் பண்டிகையை இந்து மக்கள் விடாமல் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

மொகரம் பண்டிகை அன்று தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முன்னதாகவே கிராம மக்கள்  விரதம் தொடங்கி விடுவோம்.

மொகரம் பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலைப் பொழுதில் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு ஆண்கள் தீ மிதித்தும் பெண்கள் தலையில் நெருப்புக் கங்குகளை கொட்டிக்கொண்டும் வேண்டுதல் நிறைவேற்றுவது என்பது வழக்கமாக நடந்து வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com