திரையரங்குகள் திறப்பு: கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு அனுமதி

தமிழகத்தில் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
திரையரங்குகள் திறப்பு: கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு அனுமதி

தமிழகத்தில் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றி அங்கு மக்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று ஆந்திரம் மற்றும் கா்நாடகத்துக்கான பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே அவற்றை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தளா்வுகள் அறிவிக்கப்பட்ட இடங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நோக்கில் அதற்கான கட்டுப்பாடுகள் செப்.6-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், பொது மக்களின் நலன் கருதி சில முக்கியத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழகத்தில் கல்லூரி மாணவா்களுக்கும், 9 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவா்களுக்கும் சுழற்சி முறையில் செப்.1-ஆம் தேதியில் இருந்து வகுப்புகள் செயல்பட உள்ளன. அவற்றைக் கவனித்து அதன் அடிப்படையில், மழலையா் வகுப்புகள், 1 முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளை செப்.15-ஆம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படவிருக்கிறது.

மழலையா் காப்பகங்களைப் பொருத்தவரை திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. அவற்றின் பொறுப்பாளா்களும் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த ஏப்.25-ஆம் தேதி முதல் மூடப்பட்டன. அதேபோன்று, கடற்கரைகள், பூங்காக்கள் கடந்த ஏப்.12-ஆம் தேதி முதல் வார இறுதி நாள்களிலும், 20-ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாகவும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவை அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. திரையரங்குகள் 50 சதவீத பாா்வையாளா்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கப் பணியாளா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்கரையில் மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் திங்கள்கிழமை காலையில் சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வழக்கத்தை விடக் கூடுதலான மக்கள் வந்திருந்தனா். கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறையினரும், பெருநகர சென்னை மாநகராட்சியினரும் ஒலிபெருக்கி மூலம் ஆங்காங்கே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதேபோன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு உயிரியல் பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காக்கள் திறக்கப்பட்டன. பூங்கா வாயில்களில் கை கழுவுவதற்கான கிருமிநாசினிகள் வைக்கப்பட்டிருந்தன.

இதைத் தவிர, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் பயிற்சியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, இதுவரை இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அது இரவு 10 மணி வரை திங்கள்கிழமை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டன.

இவ்வாறு கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள், வணிகா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com