மானாமதுரை அருகே மாற்றுப் பாதை அமைக்காமல் பாலங்கள் கட்டும் பணி: கிராம மக்கள் அவதி

பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையை கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்திற்குச் செல்ல அமைக்கப்படும் சாலையில் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்படாமல் நடைபெறும் பாலம் கட்டும் பணி
மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்திற்குச் செல்ல அமைக்கப்படும் சாலையில் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்படாமல் நடைபெறும் பாலம் கட்டும் பணி


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் மாற்றுப் பாதை அமைக்காமல் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சாலையை கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் செயட் அப்தூர் கிராமத்தை கடந்து கள்ளர் வலசை கிராமத்திற்குச் செல்ல வேண்டும்.

சிவகங்கை சாலையிலிருந்து  செய்களத்தூர் கிராமத்திற்கு செல்லும் 3.200 கி.மீ. தூரமுள்ள சாலையை ஊரக வளர்ச்சி முகமை மூலம் பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தில் புதிதாக அமைப்பதற்கு ரூ.2 கோடியே 22 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியில் திட்டத்தின் ஒரு பகுதியாக பல இடங்களில் மழைத் தண்ணீர் சாலையை கடந்து செல்லும் வகையில்  சாலையின் குறுக்கே பல இடங்களில் சிறிய பாலங்கள் அமைக்கப்படுகின்றன. 

பாலங்கள் வேலை நடைபெறும் இடத்தில் மாற்றுப் பாதைகள் அமைக்கப்படாமல் பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியை கடந்து செல்ல செய்களத்தூர் கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாலம் கட்டும் பகுதியில் மழை தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
பாலம் கட்டும் பகுதியில் மழை தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலம் வேலை நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.  பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் இந்த  இடங்களை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. மேலும் வேலை நடைபெறும் பகுதியில் சாலை அமைக்கப்படும் திட்டம் குறித்து முழுமையான விபரம் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை வைக்கப்படவில்லை.

இதுகுறித்து செய்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில் கடந்த 9 மாதங்களாக சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாலம் அமைக்கப்படும் இடங்களில் மழைத்தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லாதவாறு பணிகள் நடந்து வருகிறது.

மேலும் பாலம் வேலை நடைபெறும் இடங்களில் மாற்று பாதைகள் இல்லாததால் செய்களத்தூர் கிராம மக்கள் அவர்களாகவே ஒரு வழித்தடத்தை ஏற்படுத்திக்கொண்டு அதில் சென்று வருகின்றனர். மழை பெய்யும் நேரங்களில் இச்சாலையில் மழைத் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை வாகனங்களில்  இதன் வழியாக கொண்டு செல்வதற்கு கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

பாலம் அமைக்கப்படும் இடங்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாதவாறு பணிகள் நடக்கிறது. எனவே கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும்  வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com