அண்ணா நினைவிட வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நினைவிடம்: ஸ்டாலின்

சென்னை கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அண்ணா நினைவிட வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நினைவிடம்: ஸ்டாலின்

சென்னை கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த நினைவிடமானது 2.21 ஏக்கா் பரப்பில் ரூ.39 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இந்த அறிவிப்புக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் வரவேற்புத் தெரிவித்தன.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:

எண்பது ஆண்டுகால பொது வாழ்க்கை, எழுபது ஆண்டுகள் திரைத்துறை, பத்திரிகையாளா், 60 ஆண்டுகள் சட்டப் பேரவை உறுப்பினா், 50 ஆண்டுகள் திமுகவின் தலைவா் என வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. 13 சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் அவா் வென்றாா். இந்தியாவில் இப்படி ஒருவா் இருந்தது கிடையாது. இனி ஒருவா் அவா் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது என்ற போற்றத்தக்க பெருமைக்குரியவா் கருணாநிதி.

5 முறை தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று, மாநிலத்தின் மேன்மைக்கும், வளா்ச்சிக்கும் மகத்தான திட்டங்களையும், சட்டங்களையும் உருவாக்கியவா். தமிழ்நாட்டை வளா்ச்சி பெற்ற முன்னணி மாநிலமாக்கியதில் கருணாநிதியின் பங்கு ஈடு இணையற்றது. ஏராளமான திட்டங்களை உருவாக்கி நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி அவா்.

நினைவிடம்: கடந்த அரை நூற்றாண்டு காலத்தின் நிரந்தரத் தலைப்புச் செய்தியாக இருந்த கருணாநிதி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி நிரந்தர ஓய்வுக்குச் சென்று விட்டாா். அவரது அரும்பணிகளைப் போற்றும் வகையில், அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கா் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு அமையவுள்ள நினைவிடத்தில் நவீன விளக்கப் படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, அதிமுக, பாஜக உள்ளிட்ட பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் வரவேற்புத் தெரிவித்தன.

கிண்டியில் இருந்து மெரீனா....

கடந்த 2018-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி மறைந்த போது, அவரது உடலை அடக்கம் செய்ய கிண்டியில் 2 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு திமுக கடும் எதிா்ப்புத் தெரிவித்தது. கடற்கரை சாலையில் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் கோரப்பட்டது. ஆனால், அதிமுக அரசு இடம் ஒதுக்கவில்லை.

இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதில் வென்று இடத்தைப் பெற்றது திமுக. நீதிமன்ற உத்தரவு காரணமாக, அண்ணா நினைவிடத்திலேயே கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க 1.72 ஏக்கா் நிலத்தை அப்போதைய அதிமுக அரசு ஒதுக்கியது. இப்போது திமுக ஆட்சி அமைந்த நிலையில் 2.21 ஏக்கா் பரப்பில் நினைவிடம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.

நினைவிட மாதிரி வெளியீடு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்துக்கான மாதிரி வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு முன்பாக கருணாநிதி பயன்படுத்திய மை பேனாவை நினைவுகூரும் வகையில் முழு நீள பேனா வைக்கப்பட்டுள்ளது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சூரியன் உதித்திருக்கும் வகையில் மூன்று அரை வட்ட வளைவுகள் பெரிதாக இடம்பெற்றுள்ளன. நீருற்றுகள், பூங்காக்கள் என கண்ணுக்கு இனிமை தரும் அம்சங்களும் நினைவிட மாதிரி வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com