செம்மஞ்சேரி பகுதிகளில் 2-வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 
செம்மஞ்சேரி அலர்மேல்மங்காபுரத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறியும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செம்மஞ்சேரி அலர்மேல்மங்காபுரத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறியும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

இன்று (1.12.2021) முதல்வர் மு.க. ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  

மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலையில் அமையவுள்ள புதிய பாலம் குறித்த ஆய்வுப்பணிகளை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின். 
மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலையில் அமையவுள்ள புதிய பாலம் குறித்த ஆய்வுப்பணிகளை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின். 

நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (1.12.2021) அப்பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து, நேற்று  செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளைப்  பார்வையிடச் செல்லும் வழியில், அலர்மேல்மங்காபுரத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், மழைநீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அக்கோரிக்கையின் அடிப்படையில், அவர்களுக்குத் தேவைப்படும் பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்குவதற்கும், மழைநீர் வடிவதற்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இன்று அலர்மேல்மங்காபுரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்விற்குச் சென்றபோது, அங்கு தேங்கியுள்ள மழைநீர் வடிவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும், நிவாரண உதவிகளை வழங்கியமைக்கும் அப்பகுதி மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர்,மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் மழைநீர் வெளியேற 9 மீட்டர் அகலத்தில் உள்ள பாலத்தை 70 மீட்டர் அகலத்தில் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலமாக அமைக்கும் பணியையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியிலிருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் வகையில் ரூ. 47 கோடி செலவில் மழைநீர் வடிகால் (Macro Drain) அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com