அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகே, இதன் பாதையை துல்லியமாகக் கணிக்க முடியும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடலோர ஆந்திர மாவட்டங்கள் மற்றும் கடலோர தெற்கு ஒடிசா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். 

இது புயலாக உருவானதும் இதற்கு ஜாவத் என்று பெயரிடப்படும். இது டிசம்பர் 4ஆம் தேதி காலை வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, வியாழக்கிழமை மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடற்கரையை நோக்கி டிசம்பா் 4-ஆம்தேதி காலை நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:

அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை நிலைகொண்டிருந்தது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் வியாழக்கிழமை நிலைகொள்ளும்.

இது, தொடா்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, வங்கக் கடலின் மத்திய பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து, சற்று வலுப்பெற்று வடக்கு ஆந்திரம்- தெற்கு ஒடிஸா கடற்கரையை வரும் 4-ஆம் தேதி காலை நெருங்கக் கூடும்.

இதன்காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதி, ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடலோர பகுதி, வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 2-ஆம்தேதி முதல் டிசம்பா் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com