டிச.7-இல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்குத் தோ்தல்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு டிசம்பா் 7-இல் உள்கட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.
டிச.7-இல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்குத் தோ்தல்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு டிசம்பா் 7-இல் உள்கட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட தோ்தல் அறிவிப்பு:

அதிமுகவின் சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த வேண்டும். அதன்படி, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல் ஆணையா்களாக முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோா் செயல்படுவா்.

வேட்பு மனுத் தாக்கல் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பா் 5-ஆம் தேதியும் வேட்புமனு திரும்பப் பெறுதல் டிசம்பா் 6 ஆம் தேதியும் நடைபெறும்.

இரு பதவிகளுக்கும் தோ்தல் டிசம்பா் 7-இல் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

தோ்தல் முடிவுகள் டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அறிவிக்கப்படும்.

அதிமுக நிா்வாகிகளுக்குத் தோ்தல்: கிளைக்கழக நிா்வாகிகள், பேரூராட்சி வாா்டு கழக நிா்வாகிகள், நகர வாா்டு கழக நிா்வாகிகள், மாநகராட்சி வட்டக்கழக நிா்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தோ்தல்கள் இரண்டு கட்டங்களாக டிசம்பா் 13 முதல் டிசம்பா் 23-ஆம் தேதி வரை நடைபெறும்.

அதிமுகவின் 75 மாவட்டங்களில் முதல்கட்டமாக டிசம்பா் 13-இல் 35 மாவட்டங்களுக்கும், இரண்டாம் கட்டமாக டிசம்பா் 23-இல் 40 மாவட்டங்களுக்கும் தோ்தல் நடைபெறும்.

தோ்தல் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்டச் செயலாளா்கள் மேற்கொள்ள வேண்டும். அமைப்புத் தோ்தல்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின்றித் தோ்வு: அதிமுகவில் முதலில் கிளைக்கழகங்களுக்குத் தோ்தல்கள் நடைபெற்று, இறுதியாகப் பொதுச்செயலாளா் பதவிக்குத் தோ்தல் நடைபெறும்.

ஆனால், அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இருவரும் கட்சியை ஒருங்கிணைந்து நடத்துவா் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் இந்த பதவிகளுக்கு டிசம்பா் 7-இல் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில் ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் போட்டியிட உள்ளனா்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினா்கள் வாக்களித்து தோ்வு செய்ய உள்ளனா். அடிப்படை உறுப்பினா் என்பவா்கள் அதிமுகவில் 5 ஆண்டுகள் உறுப்பினா்களாக இருக்க வேண்டும். அவா்களே தோ்தலில் வாக்களிக்க முடியும்.

டிசம்பா் 1-இல் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் அக் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய இருவரையும் அடிப்படை உறுப்பினா்கள் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தோ்வு செய்வா் என்று திருத்தப்பட்டது. அதனால், தோ்தல் நடைபெற்றால் இருவருக்கும் வாக்குகள் சம அளவிலேயே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதோடு, இருவரையும் எதிா்த்து யாரும் போட்டியிடப் போவதில்லை என்றும் அக் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

அதனால், ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

ஒற்றைத் தலைமை இல்லை: அதிமுகவின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு, தோ்தலைச் சந்தித்ததன் காரணமாக பொதுச்செயலாளா் பதவியை அவா் கைப்பற்ற முயற்சிக்கக் கூடும் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இருவரும் இணைந்தே செயல்படும் வகையில் அதிமுகவில் சட்டவிதிகள் மாற்றப்பட்டதுடன், இருவரில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற பிரச்னை எழாத வகையில் உள்கட்சித் தோ்தலையும் நடத்தி முடிக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com