தமிழகத்தின் தியாக தீபங்கள் - 115: தெ.பொ.​கி​ரு‌ஷ்​ண​சாமி பாவ​ல‌ர்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர் 29.8.1890இல் பிறந்தார். தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் இவரின் இளைய சகோதரர்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 115: தெ.பொ.​கி​ரு‌ஷ்​ண​சாமி பாவ​ல‌ர்


சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர் 29.8.1890இல் பிறந்தார். தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் இவரின் இளைய சகோதரர். முத்தியால்பேட்டை பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராக விளங்கிய பாவலர் 1917இல் அன்னிபெசன்ட் அம்மையார் கைதானபோது பணியைத் துறந்து காங்கிரஸில் இணைந்து விடுதலை இயக்கங்களில் ஈடுபட்டார்.

தமிழில் பெரும்புலமை மிக்கவர் பாவலர். கவிதைகளை கணநேரத்தில் இயற்றும் படைப்புத் திறன் அமையப்பெற்றவர். இவரின் கவியாற்றலைக் கண்டு வியந்த பம்மல் சம்பந்த முதலியார் இவரை "ஆசுகவி' என்றே அழைப்பார். வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக விடுதலை உணர்வை ஊட்டவும், மக்களின் அரசியல் அறிவை மேம்படுத்தவும், பாமரர்களையும் போராட்டக் களத்தில் இறக்கவும் பாவலர் "நாடகம்' என்ற பேராயுதத்தைக் கையிலெடுத்தார். பேசும் திரைப்படங்கள் வந்திராத நிலையில் நாடகங்களே அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தன.

பாவலரின் "கதரின் வெற்றி' நாடகம் 1922இல் அரங்கேற்றப்பட்டது. விடுதலையின் அடையாளமாக "கதர்' கருதப்பட்ட காலம். இந்த நாடகத்தைத் தடை செய்தது ஆங்கிலேய அரசு. "கதர் பக்தி' என்று பெயர் மாற்றம் செய்து தடையையும் கடந்து இதனை நாடெங்கும் நடத்தி போராட்ட எழுச்சிக்குப் புத்துயிரூட்டினார் பாவலர்.

"கதரின் வெற்றி' நாடகத்தை லண்டன் மாநகரிலேயே நடத்திக்காட்டி அங்குள்ள ஆங்கிலேயர்களுக்கு இங்குள்ள ஆங்கிலேய ஆட்சியின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

1923இல் நாகபுரியில் நடைபெற்ற கொடிப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து பாவலர் எழுதிய நாடகம் "தேசியக் கொடி'. கொடி காக்கப்பட வேண்டுமென்ற கொள்கை முழக்கத்தைத் தமிழகமெங்கும் இந்த நாடகம் பறைசாற்றியது.

பாவலரின் "பம்பாய் மெயில்' நாடகத்தில் மூவர்ணக் கதர்க் கொடி பட்டொளிவீசிப் பறப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நாடகத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகன் "ஜே! ஜே! ஜே! பாரத மணிக்கொடி வாழ்க! வீர சுதந்திரம் நாடி, வேண்டி வணங்குவோம் கூடி! ஜே! ஜே! ஜே!' என்று உணர்ச்சியுடன் முழக்கமிட்டு உரக்கப் பாடுவான். இந்தக் காட்சி பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

இந்த நாடகத்தில் இடம் பெற்றுள்ள "தேசத் தொண்டே தெய்வப் பணியென அறிவாய், தெரிந்தே நடந்தால் வருமே சுயாட்சி என உணர்வாய்' என்ற பாடல் உணர்ச்சி அலையை உருவாக்கியது.  "பஞ்சாப் கேசரி' என்ற இவரது நாடகம் திரைப்படமானபோது "வந்தே மாதரம்' என்ற எழுச்சிமிக்க பாடலுடன் தொடங்கியது. "தேசபந்து', "பாரதி', "இன்றைய சமாச்சாரம்' ஆகிய இதழ்களை நடத்திவந்தார். 

ஏககாலத்தில் பதிவாகும் நூறு அம்சங்களை நினைவில் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் "சதாவதானி'யாக விளங்கியவர்.

கவிஞர், பன்மொழி வித்தகர், நாடகக் காவலர், இதழாளர், சதாவதானி என்ற தனது பன்முகத் தனித்திறன்களை விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழ அர்ப்பணித்த பாவலர் 1934 மார்ச் 1இல் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com