பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு: கூடுதல் நிதி ஒதுக்கி அரசாணை

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 27.11.2021 அன்று பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012 ன் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதல்வர், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதை துரிதப்படுத்துமாறும், மேற்படி வழக்குகளில் காவல் துறையினர் துரிதமாக முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்வதுடன் இவ்வழக்குகளை விரைவாக முடிவு செய்து, பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதை உறுதி செய்யுமாறும், சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், தொடர் கண்காணிப்பு, சட்ட உதவி, ஆகியவை முற்றிலும் குழந்தை நேய சூழலில் வழங்கிட அறிவுறுத்தினார்.
மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து துறைகள் / பங்கீட்டாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி இதுவரை 148 பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1,99,95,000 முதற்கட்டமாக வழங்கியுள்ளது என்றும், மேலும் அடுத்தக்கட்டமாக அரசு ரூ.5 கோடி ஒதுக்கவுள்ளதாகவும், இழப்பீடுகள் துரிதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-இன் கீழ் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடைக்கால இழப்பீடு மற்றும் இறுதி இழப்பீடு வழங்குவதற்காக, ரூபாய் 2.00 கோடி நிதியுடன் உருவாக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதி“க்கு கூடுதல் நிதியாக ரூ.5.00 கோடி 2021-2022 ஆம் ஆண்டில் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வரால் ஆணையிடப்பட்டதை தொடர்ந்து அரசாணை (நிலை) எண்.88, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை(சந5(2))த் துறை, நாள் 07.12.2021 உரிய ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com