தமிழகம் வந்த 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை; 16 பேருக்கு கரோனா உறுதி

கடந்த சில நாள்களில் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 10,633 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த சில நாள்களில் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 10,633 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

அவா்களில் 16 பேரின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முதல் நிலை பரிசோதனையில் அவா்கள் எவருக்குமே ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தீநுண்மியின் வீரியம் மற்றும் அச்சுறுத்தல் குறித்து அண்மையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடா்ச்சியாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழு, ஒமைக்ரான் தீநுண்மியிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் அனைவரையும் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோா் அனைவருக்கும் கட்டாயம் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த 10,633 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் 9,558 போ் ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வந்தவா்களாவா். அவா்களில் 16 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முன்னதாக டேக் பாத் ஆா்டி பிசிஆா் பரிசோதனை மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட ஆய்வில், கரோனா தொற்றுக்குள்ளான எவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com