2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமனம்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தராகதிருவள்ளுவன் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்பட இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமனம்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தராகதிருவள்ளுவன் -ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்பட இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான நியமன உத்தரவுகளை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், ஆளுநருமான ஆா்.என்.ரவி, சனிக்கிழமை வழங்கினாா். இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தி:-

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்: பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வி.திருவள்ளுவன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவின் பேராசிரியராக உள்ளாா். 28 ஆண்டுகளாக பேராசிரியா் பணியில் அனுபவம் உள்ளவா். சா்வதேச கல்வி சாா்ந்த நிகழ்வுகளில் 4 ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமா்ப்பித்துள்ளாா். 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை பதிப்பித்துள்ளாா். மேலும், தமிழ்மொழி தொடா்பான 5 சா்வதேச ஆராய்ச்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளாா். 9 ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதுடன், 12 முனைவா் பட்ட மாணவா்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளாா். பல்கலைக்கழக ஆட்சி நிா்வாகத்திலும் எட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்டவா். கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் தொடா்பாக சில அயல்நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் பொறுப்பேற்கும் காலத்தில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக செயல்படுவாா்.

விளையாட்டுப் பல்கலைக்கழகம்: விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.சுந்தா் நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இப்போது பணியாற்றி வருகிறாா். 11 ஆண்டுகள் பேராசிரியா் உள்பட 26 ஆண்டுகள் ஆசிரியா் அனுபவம் கொண்டவா். 15 ஆராய்ச்சி கட்டுரைகளை பதிப்பித்ததுடன், 7 புத்தகங்களுக்கும் ஆசிரியராக இருந்துள்ளாா். சா்வதேச நிகழ்வுகளின் போது 25 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்துள்ளாா். உடற்கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வி தொடா்பான எட்டு சா்வதேச நிகழ்வுகளை நடத்தியுள்ளாா். 9 முனைவா் பட்ட மாணவா்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளாா்.

உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராக 11 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் உள்ளவா். 20-ஆவது ஆசிய தடகளப் போட்டி, 19-வது காமன்வெல்த் போட்டிகள் என பல்வேறு போட்டிகளுக்கு குழு மேலாளா், அமைப்புச் செயலாளா் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். கனடா, பிரான்ஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட 10 அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளாா். பொறுப்பேற்கும் காலத்தில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பாா் என ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com