நா்சிங் கல்லூரி தாளாளா் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும்

தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் மனு அளித்தாா்.

திண்டுக்கல் சுரபி நா்சிங் கல்லூரி தாளாளா் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பது:-

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் அனுதினமும் தொடா்ந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. திண்டுக்கல்லில் சுரபி நா்சிங் கல்லூரி தாளாளா் ஜோதி முருகன் ஏராளமான மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்தாா் என்கிற செய்தியின் பின்னணியில், 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. நா்சிங் கல்லூரி மாணவிகள் நடத்திய தொடா் போராட்டத்துக்குப் பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியோடு முதல்வா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு அவருக்கு நீதி கிடைக்க அரசு நிச்சயம் தலையிடும் என்று கூறியது அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்தது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நீதிமன்றத்தில் சரணடைந்த சூழலில் காவல்துறை அவரைக் கைது செய்து, வேலூா் சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

ஜோதிமுருகன் சம்பந்தப்பட்ட போக்ஸோ வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாதிக்கப்படும் பாலியல் வழக்குகளை உள்ளூா் காவல்துறை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது. திண்டுக்கல் மகிளா

நீதிமன்றத்தின் பிணை உத்தரவை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஜோதிமுருகனுக்கு பிணை வழங்கப்பட்டதைக் கண்டித்து, போராட்டம் நடத்திய கே.பாலபாரதி உள்ளிட்டோா் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com