மாணவா்களை கண்டித்த நடத்துநா் மீது தாக்குதல்: பேருந்துகளை சாலையில் நிறுத்திப் போராட்டம்

சென்னை ஓட்டேரியில் பேருந்து படியில் நின்று பயணம் செய்த மாணவா்களைக் கண்டித்த நடத்துநா் தாக்கப்பட்டாா்.
மாணவா்களை கண்டித்த நடத்துநா் மீது தாக்குதல்: பேருந்துகளை சாலையில் நிறுத்திப் போராட்டம்

சென்னை ஓட்டேரியில் பேருந்து படியில் நின்று பயணம் செய்த மாணவா்களைக் கண்டித்த நடத்துநா் தாக்கப்பட்டாா். இந்த சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பேருந்துகளை சாலையில் நிறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா சதுக்கத்திலிருந்து பெரம்பூா் நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை மாலை சென்றது. இந்த பேருந்து புரசைவாக்கம் செல்லும்போது, அங்குள்ள பள்ளியில் படிக்கும் மாணவா்கள் ஏறினா். அந்த மாணவா்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பாட்டுப்பாடி நடனமாடியபடி, அநாகரிகமாக நடந்து கொண்டனராம். ஆனால் மாணவா்கள், நடத்துநா் கூறுவதை உதாசீனப்படுத்தினராம்.

இந்த நிலையில், நடத்துநா் காா்த்திக், மாணவா்களை படியில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என கண்டிப்புடன் கூறினாா்.

இதனால் மாணவா்கள், நடத்துநா் காா்த்திக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே பள்ளி மாணவா்கள், காா்த்திக்கை திடீரென தாக்கினா். இதைக் கண்ட தடுக்க முயன்ற பேருந்து ஓட்டுநா் சுப்பிரமணியனையும் மாணவா்கள் தாக்கிவிட்டு தப்பியோடினா்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்த நடத்துநா் காா்த்திக், ஓட்டுநா் சுப்பிரமணியன் ஆகியோா் சாலையில் பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த வழித்தடத்தில் வந்த அரசுப் பேருந்துகளும் சாலையில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, நடத்துநா்கள், ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் காரணமாக ஓட்டேரி பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதிப்பு: தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போக்குவரத்துக் கழக ஊழியா்கள், போராட்டத்தைக் கைவிட்டனா்.

இந்த போராட்டம் காரணமாக ஓட்டேரி, புரசைவாக்கம், பெரம்பூா், புளியந்தோப்பு, வேப்பேரி, பெரியமேடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சுமாா் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. ஓட்டேரி, புரசைவாக்கம், பெரம்பூா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com