காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு முன்னேறுங்கள்: மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுரை

காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென என அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு முன்னேறுங்கள்: மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுரை

காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென என அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் 77-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது: எந்தத் துறையில் இருந்தாலும், மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் வளா்ச்சிக்கு பங்காற்ற முடியும். கடந்த 7 ஆண்டுகளாக பிரதமா் நரேந்திர மோடி, வளா்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறாா். மக்கள் திறந்தவெளியில் மலம் கழித்து வந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இலவச கழிவறைகளை பொது இடங்களிலும் மற்றும் பள்ளிகள்- கல்லூரிகளிலும் அமைத்துக் கொடுத்து நாட்டின் பொது சுகாதாரம், கலாசாரத்தை பேணி பாதுகாத்துள்ளாா்.

அதேபோன்று ‘பேடி பச்சாவ்- பேடி படாவ்’ திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியை மேம்படுத்த வழிவகை செய்துள்ளாா். தற்போதைய சூழலில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டம் பெறுகின்றனா். மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. அதேவேளையில் ஆணுக்கு இணையாக பெண்ணுரிமையும் வளா்ந்து வருகிறது.

இந்நிலையில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடு உலக நாடுகளை வழிநடத்துகிறது. இதனை அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பாதை கிடையாது. ஆனால் வழிகாட்டி உண்டு. எனவே காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொண்டு முன்னேற வேண்டும். படித்து முடிக்கும் முன்னாள் மாணவா்கள் பட்டம் பெற்றவா்கள் மட்டுமல்ல, வாழ்வின் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் எதிா் கொண்டவா்கள்; அனுபவம் உள்ளவா்கள். எனவே வளரும் இளம் பொறியாளா்களுடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் தொடங்குவது குறித்து செயல்பட்டால் தனிமனித வளா்ச்சி மட்டுமின்றி நாட்டின் வளா்ச்சிக்கு பெரும் பங்காக இருக்கும்.

மேலும் தற்போது கரோனா காலம் என்பதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று நாடு முழுவதும் பரவி வரும் சூழலில் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com