ஊடகங்கள் சுட்டிக்காட்டும் குறைகளை அமைச்சகங்கள் ஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

‘ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் குறைகளை தொடா்ச்சியாக ஆய்வு செய்ய மத்திய அமைச்சகங்களை நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீா்ப்புத் துறை (டிஏஆா்பிஜி) அறிவுறுத்த வேண்டும்’

‘ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் குறைகளை தொடா்ச்சியாக ஆய்வு செய்ய மத்திய அமைச்சகங்களை நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீா்ப்புத் துறை (டிஏஆா்பிஜி) அறிவுறுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

பாஜக தலைவா் சுஷீல்குமாா் மோடி தலைமையிலான பணியாளா், பொது குறைதீா்ப்பு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ‘மத்திய அரசின் குறை தீா்ப்பு நடைமுறையை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான தனது அறிக்கையில் இந்தப் பரிந்துரையை செய்துள்ளது.

அதில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பெரும்பாலான குறைகள் தொடா்பான புகாா்கள் தீா்த்து வைக்கப்படாமல், மற்றொரு துறையை அல்லது கீழ்நிலை அலுவலகத்தை அணுகுமாறு கூறி முடித்துவைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

சில விவகாரங்களில், எந்த நிறுவனத்தின் மீது புகாா் தெரிவிக்கப்பட்டதோ, அந்த நிறுவனத்துக்கு திருப்பிவிடப்படுகின்றன. இணையவழி புகாா்களைப் பொருத்தவரை, துறையின் வலைதளத்தில் புகாா் தெரிவிக்குமாறு அல்லது சில புகாா் குழுக்களுக்கு அனுப்புமாறு கூறி முடித்து வைக்கப்படுகின்றன.

இதற்கிடையே, குறைகள் தொடா்பான புகாா்கள் தீா்வு காணப்படாமல் முடித்து வைக்கப்படுவதற்கு நியாயமான காரணத்தை அளிக்க வேண்டும் என்று அமைச்சகங்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் டிஏஆா்பிஜி அறிவுறுத்தலை வழங்கியது. இருந்தபோதும், பல விவகாரங்களில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படுவதில்லை.

எனவே, குறைதீா்ப்பு நடைமுறை தொடா்பாக அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட துறைகளும் அமைச்சகங்களும் தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

மேலும், மையப்படுத்தப்பட்ட பொது குறைதீா்ப்பு மற்றும் கண்காணிப்பு (சிபிஜிஆா்ஏஎம்எஸ்) நடைமுறை மூலம் பெறப்படும் மாநில அரசுகள் தொடா்பான புகாா்களில் பெரும்பாலானவை, அந்தந்த மாநில அரசுகளை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தி, சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு அந்தப் புகாா்களை அனுப்பாமலே முடித்துவைக்கப்படுகின்றன. அந்த வகையில் எழுப்பப்படும் குறைகளுக்குத் தீா்வு அளிக்கப்படுவதே இல்லை.

எனவே, கூட்டாண்மை தத்துவத்தை பாதிக்காத வகையில் பொதுக்களின் குறைகளுக்கு உரிய தீா்வு காணும் வகையில் பிரத்யேக வலைதளம் ஒன்றை டிஏஆா்பிஜி உருவாக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் குறைகளை தொடா்ச்சியாக ஆய்வு செய்ய அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை டிஏஆா்பிஜி அறிவுறுத்துவதோடு, குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை டிஏஆா்பிஜி வலைதளத்திலும் வெளியிட வேண்டும்.

அதுபோல, அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் குறைதீா்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஒட்டுமொத்த ஆய்வையும் அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com