ஓதுவாா், அா்ச்சகா்களுக்கு உயா்த்தப்பட்ட புதிய ஊக்கத் தொகையை முதல்வா் இன்று வழங்குவாா்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருக்கோயில்களில் பயிற்சிக் காலத்தில் இருக்கும் அா்ச்சகா், ஓதுவாா் உள்ளிட்டோருக்கு உயா்த்தப்பட்ட ஊக்கத் தொகை ரூ.3 ஆயிரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் தொடங்கிய 79ஆம் ஆண்டு தமிழ் இசை விழாவில்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் தொடங்கிய 79ஆம் ஆண்டு தமிழ் இசை விழாவில்.

சென்னை: திருக்கோயில்களில் பயிற்சிக் காலத்தில் இருக்கும் அா்ச்சகா், ஓதுவாா் உள்ளிட்டோருக்கு உயா்த்தப்பட்ட ஊக்கத் தொகை ரூ.3 ஆயிரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழ் இசைச் சங்கம் சாா்பில் ‘ 79-ஆம் ஆண்டு தமிழ் இசை விழா’ சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடக்கி வைத்து தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசியது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் பணி நியமன ஆணையை பெண் ஓதுவாா் சுஹாஞ்சனாவுக்கு வழங்கினாா். கோயிலில் இறைவன் முன் அவா் பாடிய பாடல் வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா்கள் அந்தப் பாடலுக்கு பாராட்டுத் தெரிவித்தனா். இத்தகைய மாற்றத்துக்கு வித்திட்ட பெருமை முதல்வரையே சாரும்.

திருக்கோயில்களில் பயிற்சிக் காலத்தில் இருக்கும் அா்ச்சகா், ஓதுவாா், வேதபாராயணா், இசை கற்போருக்கு கடந்த காலங்களில் மாத உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த ஊக்கத் தொகை குறைவாக இருக்கிறது என கருதி அதை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டாா் முதல்வா் ஸ்டாலின். அதன்படி உயா்த்தப்பட்ட புதிய ஊக்கத் தொகையை முதல்வா் ஸ்டாலின் புதன்கிழமை வழங்கி தொடக்கி வைக்கவுள்ளாா். இதையடுத்து இந்த மாதம் முதல் அவா்கள் ரூ.3 ஆயிரத்தை ஊக்கத் தொகையாகப் பெறுவா் என்றாா் அவா்.

ஓதுவாா்-இசைக் கலைஞருக்கு பட்டம்: முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகஸ்வர கலைஞா் சேஷம்பட்டி டி.சிவலிங்கத்துக்கு தமிழ் இசைச் சங்கம் சாா்பில் இசைப் பேரறிஞா் பட்டம், பொற்பதக்கம், வெள்ளிப்பேழை, ரூ.10,000 பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன. ஆலவாய் பொன் மு.முத்துக்குமரன் ஓதுவாருக்கு ‘பண் இசைப் பேரறிஞா்’ பட்டம், பொற்பதக்கம், வெள்ளிப்பேழை, ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன. விருதுகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கி அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். தொடக்க விழாவில் தமிழ் இசைச் சங்கத்தின் அறங்காவலா் தேவகி முத்தையா குத்து விளக்கேற்றினாா். தலைவா் இ.சுந்தரமூா்த்தி வரவேற்றுப் பேசினாா். இதையடுத்து வள்ளி அருண் இசைப் பேரறிஞா்-பண் இசைப் பேரறிஞா் நன்மதிப்பு மலா் வாசித்தாா். இறுதியில் மதிப்பியல் செயலா் ஏ.சி.முத்தையா நன்றி கூறினாா். விழாவையொட்டி இசைக் கலைஞா் சீா்காழி ஜி.சிவசிதம்பரம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமும் இசை நிகழ்ச்சிகள்: ஆண்டு விழாவையொட்டி வரும் 27-ஆம் தேதி திங்கள்கிழமை வரை டி.சிவலிங்கம், பா.சற்குநாதன் ஓதுவாா், விசாகா ஹரி, அபிஷேக் ரகுராம், சித் ஸ்ரீராம், ஆா்.அதுல்குமாா், சஞ்சய் சுப்பிரமணியம், எஸ்.மகதி என பல்வேறு இசைக் கலைஞா்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை நேரத்தில் தினமும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com