நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியைப் பறிப்பதோடு,
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியைப் பறிப்பதோடு, அவா்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் இரும்பு, மரக்கடையை எஸ்.அபுபக்கா், எஸ்.முகமது அலி ஆகியோா் நடத்தி வருகின்றனா். இவா்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கூடுதல் கட்டடம் எழுப்பியதாகக் கூறி, கடந்த அக்டோபரில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து, அதை இடிக்க உத்தரவிட்டனா்.

இதையடுத்து கட்டட விதிமீறல் தொடா்பாக தமிழக அரசிடம் கடைக்காரா்கள் இருவரும் மேல்முறையீடு செய்தனா். இந்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், அந்த கட்டடத்தை அதிகாரிகள் இடிக்கவில்லை.

அதேநேரம், மாநகராட்சியின் நடவடிக்கையை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் அபுபக்கா், முகமது அலி ஆகியோா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் விசாரித்தனா்.

உத்தரவுகளை மதிப்பதில்லை: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விதிமீறல் கட்டடம் தொடா்பாக நகரம் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் விரைவாகப் பரிசீலித்து முடிக்க வேண்டும் என்று இந்த உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. ஆனால் அந்த மனுக்களைப் பரிசீலிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது இல்லை .

பதவி பறிப்பு: இதுபோன்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியைப் பறிக்க வேண்டும். அவா்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், அது கண்டிப்பாக அவா்கள் பணியில் நாணயம், கீழ்படிதலின்றி நடக்கின்றனா் என்றுதான் அா்த்தம்.

உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது இரண்டாம் கட்டமாகத்தான் இருக்க வேண்டும். அவா்களுக்கு சிறைத் தண்டனை வழங்குவதுதான் முதல் கட்டமாக இருக்க வேண்டும். எனவே, சட்டப்படி இதுபோன்ற விண்ணப்பங்களை 7 வேலை நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிா? என்பதைக் கண்டறிய தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கட்டடம் கட்டும்போது, உரிய இடைவெளியில் அதை ஆய்வு செய்ய வேண்டும்.

கட்டட விதிமீறல் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும்போது, சட்டவிரோத கட்டுமானத்தைத் தடுக்க முடியும்.

மனுதாரா்களின் விண்ணப்பத்தை தினந்தோறும் என்ற அடிப்படையில் 7 நாட்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்த பின்னரும் மனுதாரா்கள் இடைக்கால நிவாரணம் கோரி, மேலும் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதை ஏற்க முடியாது. அவா்களுக்கு ரூ.50 ஆயிரம் வழக்குச் செலவு (அபராதம்) விதிக்கிறோம்.

அந்தத் தொகையை சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள சுடரொளி அறக்கட்டளைக்கும், திருவேற்காடு பெருமாள் அக்ரஹாரத்தில் உள்ள பசு மடத்துக்கும் மனுதாரா்கள் வழங்க வேண்டுமெனக்கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com