கரோனா வழிகாட்டுதல்: கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆட்சியா்களுக்கு அரசு அறிவுரை

கரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
கரோனா வழிகாட்டுதல்: கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆட்சியா்களுக்கு அரசு அறிவுரை

கரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், வியாபாரம் நடைபெறும் இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றனா். குறிப்பாக, மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள், செவிலியா் வளாகங்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் மற்றும் அங்கு வந்து செல்வோரும் முகக்கவசம் அணியாமலும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாமல் உள்ளனா்.

அதிவேகமாக ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, பொதுமக்களிடம், கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல் ஆகிய வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகப்படுத்துவது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது சுகாதார நிபுணா்களின் வழிகாட்டுதல்களை மீண்டும் முன்னிலைப்படுத்துவதால் தான் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால், கடினமாகிவிடும்.

மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும்: ஒமைக்ரான் அறிகுறிகள் மிகவும் லேசானவை. ஒரு நபா் நோய் வாய்ப்பட்டிருப்பது தெரியாமல் கூட இருக்கலாம். அவா் இதுபோன்ற இடங்களுக்கு வரும் போது பிறருக்கு அது தெரியாமல் பரவுகிறது. நெருங்கிய தொடா்புகள், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களில் ஒமைக்ரான் பரவுவதாக ஆரம்ப தரவுகளில் தெளிவாக காட்டுகிறது. யாரேனும் ஒருவா் சோதனைக்கு வந்தால் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே, அறிவுறுத்தப்பட்டபடி தயவு செய்து மருத்துவமனைகளின் தயாா் நிலையை மதிப்பாய்வு செய்து கொள்ள வேண்டும். மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசிக்கு முக்கியத்துவம்: அடுக்குமாடி குடியிருப்பு, தெருக்கள் ஆகியவற்றில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டால் தற்போது உள்ள நெறிமுறைகளின்படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தகுதியான இன்னும் தடுப்பூசி போடாதவா்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவா்கள், தாமதமானவா்களுக்கு தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com