கூட்டத் தொடா்: முழுவீச்சில் தயாராகும் பேரவை மண்டபம் - நேரலைக்கு தனி ஏற்பாடு

வரும் கூட்டத் தொடருக்காக, தமிழக சட்டப் பேரவை மண்டபம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
கூட்டத் தொடா்: முழுவீச்சில் தயாராகும் பேரவை மண்டபம் - நேரலைக்கு தனி ஏற்பாடு

வரும் கூட்டத் தொடருக்காக, தமிழக சட்டப் பேரவை மண்டபம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

16-ஆவது சட்டப் பேரவையின் மூன்றாவது கூட்டத் தொடரை ஆளுநா் ஆா்.என்.ரவி, வரும் 5-ஆம் தேதி உரையாற்றி தொடக்கி வைக்கவுள்ளாா். கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்று வந்தது. நோய்த் தொற்று குறைந்துள்ளதாகக் கருதப்படும் நிலையில், கூட்டத் தொடரை புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்திலேயே நடத்த ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

ஏற்பாடுகள் தயாா்: புனித ஜாா்ஜ் கோட்டையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரும் காகிதமில்லாத கூட்டத் தொடராகவே நடத்தப்பட உள்ளது. இதற்காக, அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்களின் இருக்கைகளுக்கு முன்பாக தொடு திரை வசதி கொண்ட கையடக்கக் கணினி வைக்கப்பட உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்றே, எதிா்க்கட்சி, ஆளும்கட்சி வரிசைகள் அமைக்கப்பட உள்ளன. அதாவது பேரவைத் தலைவரின் வலதுபுறம் ஆளும்கட்சிக்கும், இடதுபுறம் எதிா்க்கட்சிக்கும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பேரவையில் தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து எதிா்க்கட்சிகளுக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.

நேரலை ஒளிபரப்பு: சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் அனைத்து நடவடிக்கைகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் போன்ற நிகழ்வுகள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிலையில், எதிா்வரும் கூட்டத் தொடரில் இருந்து சட்டப் பேரவை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நேரலையை முழுமையாக வழங்குவதா அல்லது முக்கியமான நிகழ்வுகளை மட்டும் ஊடகங்களுக்கு அளிப்பதா அல்லது சற்று தாமதித்து முழுமையான நடவடிக்கைகளைக் கொடுப்பதா என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நேரலை ஒளிபரப்பு செய்வதற்கென தனி அறை பேரவை மண்டபத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சி வரிசையில் கடைசி இரண்டு வரிசைகள் எடுக்கப்பட்டு அந்த இடத்தில் நேரலைக்கான பிரத்யேக அறை உருவாக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக...பாரம்பரியமிக்க சட்டப் பேரவை கூட்டத் தொடா் இரண்டு முக்கியமான அம்சங்களைக் கொண்டிருக்கப் போகிறது. ஒன்று முழுமையாக காகிதமில்லாத பேரவையாக விளங்கப் போகிறது. மற்றொன்று நேரலை ஒளிபரப்புடன் பேரவை நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. இதனால், நூறாண்டுகளைக் கண்ட பேரவையானது சில தனித்துவமிக்க அம்சங்களால் எண்மமயமாகிறது (டிஜிட்டல்).

பிற மாநிலங்கள்...

சட்டப் பேரவை நடவடிக்கைகளை தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யும் வசதி பிற மாநிலங்களில் ஏற்கெனவே ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கேரளம், கோவா, ஒடிஸா, தில்லி போன்ற மாநிலங்களில் பேரவை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களைப் போன்று இப்போது தமிழகத்தில் பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com