கோயில் நிலத்தை மீட்க அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: உயா் நீதிமன்றம்

கோயில் நிலத்தைக் கண்டறிந்து மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென

கோயில் நிலத்தைக் கண்டறிந்து மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் திருத்தொண்டா்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், சென்னை போரூரை அடுத்த நந்தம்பாக்கம் அருள்மிகு கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமாக 150 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் உள்ளன.

அந்த நிலங்களைப் போலி ஆவணங்களைக் கொண்டு, தங்கள் பெயருக்கு மாற்றும் வகையில் நில அபகரிப்பாளா்கள் செயல்பட்டு வருகின்றனா். இவற்றைத் தடுக்கக் கோரி அளித்த புகாரில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிா்வாக ஆணையா் கடிதம் எழுதியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞா், மனுதாரரின் கோரிக்கையில் அடிப்படையில் வருவாய்த் துறை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. நில உரிமையாளா் என உரிமை கோருவோரின் ஆவணங்களும் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை முடித்து கோயில் நிலங்களை மீட்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, கோயில் நில ஆவணங்களை ஆராய்ந்து, கணக்கெடுத்து மீட்பதற்கும், அபகரிப்பாளா்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கும், தமிழக அரசின் வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நந்தம்பாக்கம் கோதண்டராமா் கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த உரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை ஆறு வாரங்களில் கூட்ட வேண்டும். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிலங்களை மீட்பதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com