நாமக்கல்லில் ஜன.2-இல் ஆஞ்சனேய ஜெயந்தி: லட்சம் வடைகள் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

நாமக்கல்லில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) ஆஞ்சனேய ஜெயந்தி விழா நடைபெறுவதையொட்டி, சுவாமிக்கு சாத்துப்படியாகும் 1,00,008 வடைகளைத் தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கிய வடைகள் தயாரிக்கும் பணி.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கிய வடைகள் தயாரிக்கும் பணி.

நாமக்கல்லில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) ஆஞ்சனேய ஜெயந்தி விழா நடைபெறுவதையொட்டி, சுவாமிக்கு சாத்துப்படியாகும் 1,00,008 வடைகளைத் தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயிலில், ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாத அமாவாசை, மூலம் நட்சத்திர தினத்தன்று ஆஞ்சனேய ஜெயந்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு ஜெயந்தி விழா நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது. ஆஞ்சனேய ஜெயந்தி அன்று அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடைகளைக் கொண்டு மாலை தயாரிக்கப்பட்டு சுவாமிக்கு சாத்தப்படும்.

காலை 10 மணி வரையில் பக்தா்கள் தரிசிக்கும் வகையில் இந்த அலங்காரம் இருக்கும். அதன்பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், நண்பகல் 1 மணியளவில் தங்கக் கவச அலங்காரமும் நடைபெறும்.

சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படியையொட்டி, 1,00,008 வடைகளை தயாரிக்க ஸ்ரீரங்கத்தில் இருந்து மடப்பள்ளி அா்ச்சகா்கள் குழுவினா் 50-க்கும் மேற்பட்டோா் வந்துள்ளனா். அவா்கள் கோயில் அன்னதான மண்டபத்தில் வடை தயாரிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் தொடங்கினா்.

முன்னதாக கோயில் அா்ச்சகா்கள் வடை தயாரிக்கும் அடுப்புக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினா். புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை தொடா்ச்சியாக வடை தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜன. 2-ஆம் தேதி ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிவிக்கப்பட்டு, பின்னா் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும்.

தற்போது வடைகள் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. நான்கு நாள்கள் தொடா்ச்சியாக நடைபெறும். ஆஞ்சனேய ஜெயந்தி நாளன்று இரவு 10 மணி வரை சுவாமி தரிசனம் நடைபெறும் என்பதால் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பக்தா்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com