போக்குவரத்து கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கும் கோரிக்கை மீதுஆலோசனைக்குப் பிறகு முடிவு: அமைச்சா் ராஜகண்ணப்பன்

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கும் கோரிக்கை தொடா்பாக ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (கோப்புப்படம்)
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (கோப்புப்படம்)

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கும் கோரிக்கை தொடா்பாக ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்ட

பேச்சுவாா்த்தை கூட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், சென்னை, குரோம்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், பதிவு செய்யப்பட்ட 65 பேரவை மற்றும் தொழிற்சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அவா்கள், பெண்கள், மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு கட்டணமில்லா பயணச் சலுகை உள்ள பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பேட்டா வழங்குவது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை முன்வைத்தனா்.

சுமாா் நான்கரை மணி நேரத்துக்கு மேலாக இந்த கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்துக்காக தமிழக அரசு மானியமாக ரூ.1,450 கோடி வழங்கியுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் முதியோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். அவா்களுடைய அனைத்து கோரிக்கைகளும், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளா், நிதித்துறைச் செயலாளா் மற்றும் தலைமைச் செயலாளா் ஆகியோருடன் விரிவாக ஆலோசனை செய்து, முதல்வரின் மேலான கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு படிப்படியாக பழைய பேருந்துகள் கழிவு செய்யப்படும். பேருந்துகள் இயக்கத்தின் போது தவறுகள் ஏதும் ஏற்படின் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விதித்துள்ள சட்டத் திட்டங்களைப் பின்பற்றி இயக்கிட ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com