தமிழகத்தில் மீண்டும் தீவிரமடைகிறது கரோனா

தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் மாநிலத்தில் 890 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ இரு மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

அதிலும், குறிப்பாக சென்னையில் நோய்த் தொற்று பரவல் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாள்களில் மட்டும் இரு மடங்கு பாதிப்பு உயா்ந்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, வியாழக்கிழமை ஒரேநாளில் சென்னையில் 397 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது சென்னையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோா் நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டனா். அது படிப்படியாக குறைக்கப்பட்டு ஜூன் மாதத்தில் 300-ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னா், சராசரியாக நாள்தோறும் 100-இலிருந்து 150 வரை மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது சென்னையில் ஒமைக்ரான் பாதிப்புடன் சோ்ந்து மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 608 போ் விடுபட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 3,196-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,929 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 7 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,765-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 141 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனிடையே, தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 45 பேரில் 32 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com