21 ஆண்டுகளுக்குப்பின் முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம்: கேரள மின்துறை அமைச்சர் துவக்கி வைப்பு

முல்லைப்பெரியாறு  அணைக்கு தரைவழி மின்சாரம் வழங்கும் விழாவில், திங்கள்கிழமை கேரள மின்வாரிய அமைச்சர் எம.எம்.மணி பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சார இணைப்பை கேரள மாநில மின் துறை அமைச்சர் எம்.எம். மணி தொடங்கி வைத்தார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சார இணைப்பை கேரள மாநில மின் துறை அமைச்சர் எம்.எம். மணி தொடங்கி வைத்தார்.


கம்பம்: முல்லைப்பெரியாறு  அணைக்கு தரைவழி மின்சாரம் வழங்கும் விழாவில், திங்கள்கிழமை கேரள மின்வாரிய அமைச்சர் எம.எம்.மணி பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 
முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து 1980 முதல் வனப்பகுதி வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1999-இல் இப்பகுதி வழியாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில், காட்டுயானை ஒன்று இறந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2000-ஆவது ஆண்டு முதல் பெரியாறு அணைப்பகுதிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது.

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் கம்பிகளை வனப்பகுதியில் தரைவழியாகக் கொண்டுச் செல்ல 1 கோடியே 65 லட்சம் ரூபாயை தமிழக பொதுப்பணித்துறை, கேரள மின்வாரியத்திற்கு செலுத்தியது. 

இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு திங்கள்கிழமை  குமுளி அருகே வண்டிப்பெரியாறில் பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பீர்மேடு சட்டப்பேரவை உறுப்பினர் பிஜிமோள் தலைமை தாங்கினார். கேரள மின்வாரிய அமைச்சர் எம்.எம்.மணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை (மதுரை மண்டலம்) கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின் உட்பட தமிழக கேரள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
பிஜிமோள் எம்.எல்.ஏ. பேசுகையில்,  நூற்றாண்டுக்கு மேல் பழமையானதும், இப்பகுதிவாசிகளின் அச்சுறுத்தலுக்குமான பெரியாறு அணைக்குப்பதிலாக புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் நாம் முல்லைப்பெரியாறு அணைக்கு நட்புடன் மின்சாரம் வழங்கி உள்ளோம் என்றார்.

மின்துறை அமைச்சர் மணி பேசுகையில், பெரியாறு அணைக்கு தரை வழி மின்சாரம் வழங்க தமிழ்நாடு 15 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கட்டியது,  இன்னும் சிறிது பணம் கட்டவேண்டும் என கேரள மின்வாரிய அதிகாரிகள் சிலர் இடையூறு செய்தனர். தமிழகம் கட்டி உள்ள பணத்திற்கு வட்டி கணக்கு வைத்தால் அதைவிட பத்து மடங்கு வரும், தமிழகம் நம்மோடு நட்பு பாராட்டும் மாநிலம், நமது சகோதரர்கள் உள்ளனர் என்று கூறி நடவடிக்கை எடுக்கவைத்தேன் என்று பேசினார்.

பின்னர் கேரள மாநில மின்சார வாரியத் துறை அமைச்சர் எம். எம். மணி மற்றும் கேரள அரசு அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு வந்தனர்.

அங்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்களை வரவேற்றார். பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் எம்.எம். மணி, முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு மின்சார இணைப்பைத் தொடங்கிவைத்தார். அப்போது அணைப்பகுதியில் இருந்த விளக்குகள் ஒளிர்ந்ததும் அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com