நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்குவதா? கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்குவதா? கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்து நிரந்தர பணிகளை இல்லாமல் ஆக்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது உள்ளிட்ட ஆதிசேஷய்யா கமிஷனின் பரிந்துரைகளை நிராகரிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவது, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்குதல், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்குவது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுவது, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை பெறுவது போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் பெருந்திரள் முறையீட்டுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சென்னையில் குவிந்தனர். அவர்களது பல கட்ட போராட்டத்தின் போதும் அழைத்துப் பேசாத தமிழக அரசு, இந்தப் போராட்டத்தையும் அடக்குமுறையைக் கையாண்டு ஒடுக்க நினைப்பது சற்றும் பொருத்தமல்ல. மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்ததில் பெண் ஊழியர் உள்பட 7 பேர் காயமுற்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறையின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
போராடும் அரசு ஊழியர்களை உடனடியாக அழைத்து பேசி அவர்களது நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com