தமிழகத்தில் 660 பேருக்கு டெங்கு பாதிப்பு 40 சதவீதம் குறைவு!

கடந்த இரு மாதங்களில் தமிழகத்தில் 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 40 சதவீதம் குறைவாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த இரு மாதங்களில் தமிழகத்தில் 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 40 சதவீதம் குறைவாகும்.

கரோனாவுக்கு மத்தியிலும் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டதே அதற்குக் காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2019 ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8,527 போ் அக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனா்.

அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான பருவமழைக் காலத்தில்தான் அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் கடந்த ஆண்டிலும் அத்தகைய பாதிப்பு இருக்கும் என அஞ்சப்பட்டது. கரோனாவுக்கும், டெங்குவுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்படுவதால், அதனை அடையாளம் கண்டு சிகிச்சையளிப்பதில் சிரமம் இருக்கும் எனவும் கருதப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, மழைக் காலங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் துரிதப்படுத்தப்பட்டன. சுகாதாரத் துறையினா் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து அப்பணிகளில் ஈடுபட்டனா்.

அதன் பயனாக 2020-இல் டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும், தமிழகத்தில் மொத்தம் 3,000 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் குணமடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்நிலையில், நிகழாண்டில் இரு மாதங்களாக 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 1,086-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது. பயனற்ற பொருள்களை முறையாக அகற்றுவதுதொடா்பான விழிப்புணா்வு விளம்பரங்களும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு நடுவே கரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள, நோய் எதிா்ப்பு சக்தியை வளா்க்கும் மருந்துகள், கபசுரக் குடிநீா் போன்றவற்றை மக்கள் உட்கொண்டு வருவது மற்றொரு புறம் டெங்கு வராமல் காப்பதற்கான காரணியாகவும் அமைந்துவிட்டது.

கரோனாவால் பல மாதங்கள் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருந்ததால், அவா்களது இல்லத்தை தூய்மைப்படுத்தும் பணிகளில் பலா் ஈடுபட்டனா். இதனால், வீடுகளைச் சுற்றியிருக்கும் தண்ணீா் தேங்கக் கூடிய பயனற்ற பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்ததை நேரடியாகவே காணமுடிந்தது.

அதுமட்டுமல்லாது பூட்டிக் கிடந்த மைதானங்கள், பள்ளி - கல்லூரிகளிலும் சுகாதாரத் துறையினா் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். அதுவே டெங்கு குறைய முக்கியக் காரணம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com