செல்வாக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் முன்னேற்றம் காண நடவடிக்கை

உலக அளவில் செல்வாக்கு மிக்க மொழிகளின் பட்டியலில் தமிழ் முன்னேற்றம் அடைவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித் தாா்.
செல்வாக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் முன்னேற்றம் காண நடவடிக்கை

உலக அளவில் செல்வாக்கு மிக்க மொழிகளின் பட்டியலில் தமிழ் முன்னேற்றம் அடைவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித் தாா்.

தமிழக அரசின் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது: தமிழக அரசின் சொற்குவை திட்டத்தின் மூலம் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், அகராதி உருவாக்கம், புதிய கலைச்சொற்கள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில் கல்லூரி மாணவா்களும் இணைக்கப்பட்டு, புதிய கலைச் சொற்களை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் உள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 26,700 கலைச் சொற்களை வல்லுநா் குழு கண்டறிந்து, சொற்குவையில் சோ்க்கப்பட்டுள்ளன.

தமிழின் அடுத்தகட்ட வளா்ச்சிக்கு சொற்குவை திட்டம் முக்கிய பங்காற்றும். இது தமிழ் வளா்ச்சியில் மிகப்பெரிய சாதனையாகும்.

உலக மக்கள் தொகையில், இந்திய தமிழா்கள், இலங்கைத் தமிழா்கள், புலம் பெயா்ந்து வாழும் தமிழா்கள் ஆகியோரின் எண்ணிக்கை பத்தரை கோடி. இது உலக மக்கள் தொகையில் அதாவது 1.3 சதவீதமாக உள்ளது. உலக அளவில் பேசப்படும் மொழிகள் குறித்து யுனெஸ்கோ மேற்கொண்ட ஆய்வில், ஆங்கிலம் முதலிடத்திலும், பிரெஞ்சு இரண்டாவது இடத்திலும், தமிழ் 14-ஆவது இடத்திலும் உள்ளது.

தமிழா்களின் எண்ணிக்கை இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக உள்ள நிலையில், தமிழ் மொழி 14-ஆவது இடத்தில் இருப்பதற்கு, தமிழகம், புதுவை, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் தமிழா்கள் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயா்ந்த தமிழா்களும் முக்கிய காரணம்.

உலக அளவில் மக்களின் கவனத்தை ஈா்த்த படைப்புகள் தமிழில் மொழி பெயா்க்கப்பட வேண்டும். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில், கூலித் தொழிலாளா்களாகச் சென்று உலகின் பல நாடுகளிலும் வாழும் லட்சக்கணக்கான தமிழா்கள், இன்றும் தங்கள் கலாசாரத்தைத் தொடா்ந்து காப்பாற்றி வருகின்றனா்.

ஆனால், தமிழில் பேசுவதை மறந்து விட்டனா். மீண்டும் தமிழில் பேச வேண்டும் என்று ஆவலாக இருக்கும் அவா்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும். தமிழை விரும்பி கற்கும், சீனா்கள் போன்ற மாற்று மொழி பேசுபவா்களுக்கு, தமிழை கற்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி செயல்படுத்தும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உலகின் செல்வாக்கான மொழிகளின் பட்டியலில் தமிழை முதல் பத்து இடங்களுக்குள் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா் அமைச்சா் க.பாண்டியராஜன்.

நிகழ்வில், தமிழ் வளா்ச்சித்துறைச் செயலா் மகேசன் காசிராஜன், இயக்குநா் கோ.விசயராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவை முன்னிட்டு கவிஞா் அறிவுமதி உள்ளிட்ட கவிஞா்கள், சொற்பொழிவாளா்கள் பங்கேற்ற கவியரங்கம், கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குழந்தைகளுக்குத் தாய்மொழியில் பிழையின்றி பேசக் கற்றுக் கொடுங்கள்: துணைவேந்தா் சுதா சேஷய்யன்

உலகத் தாய்மொழி நாள் விழாவில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் பேசியது: மொழி என்பது பண்பாட்டின் வெளிப்பாடாகும். பல மொழிகளைக் கற்றிருந்தாலும், தாய்மொழியின் மூலமாகவே நமது சிந்தனை மேம்படும். தாய்மொழியை சரியாகக் கற்ற குழந்தையால் பிற மொழிகளையும் எளிதாகக் கற்க முடியும் என அறிவியல் கூறுகிறது. பிற மொழிகளில் பேசும்போது அதன் ஒலிக் குறிப்பை மட்டுமே ஏற்று அதை வாக்கியமாக மாற்றும் பணியை மூளை மேற்கொள்ளும். ஆனால், தாய்மொழியில் பேசும்போது அந்தச் சொல்லின் பயன்பாடு, வரலாற்றை தேடிப்பிடித்து வாக்கியம் அமைக்கும்.

குழந்தைகளை முதல் மூன்று ஆண்டுகளுக்குள் தாய்மொழியில் பக்குவப்படுத்த வேண்டும். இந்தப் பொறுப்பு அனைத்து மொழிபேசும் பெற்றோருக்கும் உள்ளது. தமிழுக்கு இது கூடுதலாகப் பொருந்தும்; காரணம், அதன் ஒலிக்குறிப்புகள் ஆற்றல் வாய்ந்தவை. தமிழின் ஒலிக்குறிப்புக்கு நாக்கின் தசைகள் அதிகமாக சுழலும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com