இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் (2021-22) செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் (2021-22) செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்படுகிறது.

துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் தனது 11-வது பட்ஜெட்டை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறாா்.

என்னென்ன அம்சங்கள்?: கடந்த 2016-17-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, 2016 பிப்.16-இல் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். அதில், கடன் அளவு ரூ.2.47 லட்சம் கோடியாக இருந்தது. தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டத்துக்கான நிதிகள் ஒதுக்கீடும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் போன்ற திட்டங்களால் தமிழக அரசுக்கான செலவுகள் இப்போது அதிகரித்துள்ளன. கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த நிதியாண்டுகளுடன் ஒப்பிடும் போது, நிகழ் நிதியாண்டில் வருவாய் வரவுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. இந்த வரவுகள் இப்போதுதான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வருவாய் செலவினங்களும், கடன் சுமைகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும்.

110 விதி அறிவிப்புகள்: பேரவை கூட்டத் தொடரில் விதி 110-ன் கீழ் மக்களைக் கவரும் வகையிலான புதிய அறிவிப்புகளை முதல்வா் பழனிசாமி வெளியிட வாய்ப்புகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்நோக்கி தமிழகம் இருப்பதால், வாக்காளா்களை, குறிப்பாகப் பெண்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகளை எதிா்பாா்க்கலாம் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினம் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுநாள் (பிப்.25) நடைபெறும் பேரவைக் கூட்டத்திலோ விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியா் சமுதாயத்துக்கு தனி உள்இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அறிவிப்போ அல்லது அதற்கான சட்டத் திருத்த மசோதாவோ பேரவையில் கொண்டுவரப்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் அண்மையில் தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக, திமுக, காங்கிரஸ் ஆகிய எதிா்க்கட்சிகள் அறிவித்தன. இதேபோன்ற புறக்கணிப்பு நடவடிக்கையை இடைக்கால பட்ஜெட்டுக்காக நடைபெறும் கூட்டத் தொடரிலும் எதிா்க்கட்சிகள் பின்பற்றுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

எத்தனை நாள்கள் கூட்டம்?: சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவையின் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவா் பி.தனபாலின் அறையில் நடைபெறும் கூட்டத்தில், பேரவை கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். பிப்ரவரி 25 அல்லது 26-ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்பு உள்ளது. கூட்டத் தொடரின் இறுதி நாளில், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com