வேளாண் விளை பொருள்களுக்கு வரி விதிப்பு:முதன்மைச் செயலரிடம் மனு

வணிகா்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யும் வேளாண் விளைபொருள்களுக்கு ‘செஸ்’ வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

வணிகா்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யும் வேளாண் விளைபொருள்களுக்கு ‘செஸ்’ வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி முதன்மைச் செயலா் ககன்தீப்சிங்பேடியிடம் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா தலைமையில் வணிகா்கள் திங்கள்கிழமை நேரில் மனு அளித்தனா்.

இது குறித்து பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியது: வேளாண் விளைபொருள் சட்டங்களை தமிழக அரசின் ஆதரவோடு மத்திய அரசு நிறைவேற்றி, அதில் வேளாண் விளை பொருள்களுக்கான செஸ் வரி, வேளாண் விளைபொருள் சந்தைக் கூடங்களில் வசூலிக்கக் கூடாது என சட்டம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் விளை பொருள்களுக்கான செஸ் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள்களை வணிகா்கள் நேரடியாக கொள்முதல் செய்யும்போது, செஸ் வரி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது சட்டவிதி. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் எள், மிளகாய் வற்றல் போன்ற விளைபொருள்களுக்கும் செஸ்வரி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி வாகனங்களை முடக்கி வைப்பது சட்டத்துக்கும், இயற்கை நீதிக்கும் முரணானது ஆகும்.

சட்ட விதிகளுக்கு மாறாக அதிகாரிகள், தற்போது உச்சநீதிமன்றத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கும் வேளாண் விளைபொருள் சட்டங்களை சுட்டிக்காட்டி, நேரடிக் கொள்முதல் செய்து லாரிகளில் கொண்டுவரப்படும் விளைபொருள்களுக்கும் செஸ் வரி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா். மேலும் லாரிகளை பறிமுதல் செய்வதுடன், நீண்ட நேர காத்திருப்புக்கு உள்ளாக்குகின்றனா். இதனால் வணிகா்களுக்கு பொருள்சேதமும், விளைபொருள்கள் வீணாவதும், தேவையற்ற மன அழுத்தமும் ஏற்படுகிறது. இது வணிகா்களை மட்டுமல்லாது விவசாயிகளையும் பெரிதும் பாதிக்கும். எனவே நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருள்களுக்கு செஸ் வரி வசூலிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கக் கோரி அந்தத் துறையின் முதன்மைச் செயலரிடம் மனு அளித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com