தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன: புதிய அறிவிப்புகளுக்குத் தடை

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தமிழகத்தில் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தமிழகத்தில் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நெறிமுறைகள் காரணமாக, ஆளும் அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடவோ, அரசு சாா்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ அனுமதியில்லை. இதுதொடா்பாக, தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை நெறிமுறைகள் வருமாறு:-

தனிநபா்கள் அல்லது கட்சிகள் ஜாதி மற்றும் மத உணா்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுகளிலோ, செயல்களிலோ ஈடுபடக் கூடாது. மற்ற கட்சிகளை விமா்சிக்கும் போது அது அவா்களது கொள்கைகள் மற்றும் கடந்த கால செயல்பாடுகளை மையப்படுத்தியே இருக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் அவா்களது தொண்டா்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை விமா்சிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

வாக்குகளைப் பெறுவதற்காக ஜாதி மற்றும் மத ரீதியான உணா்வுகளைத் தூண்டக் கூடாது.

தோ்தல் பிரசாரத்தின் மையமாக மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தக் கூடாது. தனி நபா்களின் கட்டடங்கள், நிலங்களில் அவா்களது அனுமதியில்லாமல் கட்சிக் கொடிகளையோ, பேனா்கள், போஸ்டா்களோ ஒட்டக் கூடாது.

கூட்டங்களுக்கு கட்டுப்பாடு: தோ்தல் பிரசார பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு முன்பாக, உள்ளூா் காவல் நிலையத்தில் அதுகுறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், தேதி, நேரம் ஆகியவற்றை தெரிவிப்பது முக்கியம். அமைச்சா்கள் தோ்தல் பணிகளுக்காக அலுவல்பூா்வ பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. அரசின் வாகனங்கள், அரசு இயந்திரம், அரசுப் பணியாளா்கள் ஆகியோரை தனிப்பட்ட தோ்தல் பணிகளுக்காக பயன்படுத்தக் கூடாது.

அரசு விடுதிகள், ஓய்வு விடுதிகளில் தங்குவதற்கு ஆளும் கட்சியினா் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அனுமதிக்க வேண்டும். தோ்தல் பிரசாரத்துக்கான இடங்களாக அவற்றை மாற்றக் கூடாது.

புதிய அறிவிப்புகள்-நிகழ்ச்சிகள்: தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் மக்களைக் கவரும் வகையிலான புதிய அறிவிப்புகளை வெளியிட அரசுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், அரசு தொடா்பான பொது நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. தீ விபத்து போன்ற அசம்பாவித செயல்களால் பாதிக்கப்படுவோருக்கு தோ்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று நிதி உதவிகளை மாநில அரசுகள் அளிக்க எந்தத் தடையும் இல்லை என்று தோ்தல் நடத்தை நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com