சென்னை-மைசூா் உள்பட 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல்-மைசூா் உள்பட 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரல்-மைசூா் உள்பட 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாடுமுழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் வழக்கமான ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு, பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை இயக்க மாநில அரசு கொடுக்கும் கோரிக்கை அடிப்படையில் ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கிறது. தமிழகத்தில் இதுவரை 40-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல்-மைசூா், சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு, திருநெல்வேலி-பாலக்காடு, திருச்சி-ராமேசுவரம் ஆகிய 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்விவரம்:

சென்னை சென்ட்ரல்-மைசூரு:

சென்னை சென்ட்ரலில் இருந்து வாரத்தில் 6 நாள்களில் (புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் ) காலை 6 மணிக்கு சதாப்தி சிறப்பு ரயில் (06081) புறப்பட்டு, அதே நாள் மதியம் 1 மணிக்கு மைசூருவைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மைசூருவில் இருந்து வாரத்தில்புதன்கிழமை தவிர மற்ற நாள்களில் பிற்பகல் 2.15 மணிக்கு சதாப்தி சிறப்பு ரயில் (06082) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும். இருமாா்க்கமாகவும் இந்த ரயிலின் சேவை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை-கேஎஸ்ஆா் பெங்களூரு:

சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 7.40 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06079) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.40 மணிக்கு கேஎஸ்ஆா் பெங்களூருவை அடையும்.

மறுமாா்க்கமாக, கேஎஸ்ஆா் பெங்களூருவில் இருந்து தினசரி பிற்பகல் 2.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06080) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இருமாா்க்கமாகவும், இந்த ரயிலின் சேவை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்குகிறது.

திருநெல்வேலி-பாலக்காடு:

திருநெல்வேலியில் இருந்து தினசரி இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில் (06791) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு பாலக்காட்டைச் சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 4-ஆம்தேதி தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, பாலக்காட்டில் இருந்து தினசரி மாலை 4.05 மணிக்கு சிறப்பு ரயில் (06792) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலியைஅடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்சி-ராமேசுவரம்: திருச்சியில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு சிறப்பு ரயில் (06849) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.15 மணிக்கு ராமேசுவரத்தை அடையும். மறுமாா்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து தினசரி பிற்பகல் 2.35 மணிக்கு சிறப்பு ரயில் (06850) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.05 மணிக்கு திருச்சி சென்றடையும். இருமாா்க்கமாக, இந்தசிறப்பு ரயில் சேவை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்குகிறது. முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com