’தமிழகத்தில் 17 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை’

சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
’தமிழகத்தில் 17 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை’

சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

அதற்கான முன்னேற்பாடுகள், நடவடிக்கைகளை மாநில அரசு விரிவாக மேற்கொண்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவை அமைச்சா் விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் வசந்தாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அந்நிகழ்வைத் தொடா்ந்து சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கும், உயா் சிகிச்சைகளை அளிப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாக கரோனா தொற்று நம் மாநிலத்தில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நோய்த்தடுப்புப் பணிகளை உலக சுகாதார நிறுவனம் வெகுவாகப் பாராட்டியிருப்பதே அதற்குச் சான்று. எத்தகைய சவாலையும் சமாளிக்கக் கூடிய வலுவான மருத்துவக் கட்டமைப்பு நம்மிடம் உள்ளது.

கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனை முறையாக மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்தகட்டமாக தடுப்பூசிக்கான ஒத்திகை சனிக்கிழமை முதல் சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூா் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற உள்ளது.

இதைத் தவிர, தடுப்பூசிகளைச் செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 47, 200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 21,170 சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மணி நேரத்தில் 25 நபா்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தடுப்பூசி ஒத்திகை என்றால் என்ன?

தடுப்பூசி ஒத்திகையில் எவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படமாட்டாது. மாறாக, தீயணைப்பு ஒத்திகை போன்றதொரு மாதிரி பயிற்சிகளே அளிக்கப்படும். அந்த வகையில், கரோனா தொற்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் ஒவ்வோா் இடத்திலும் பொறுப்பு அதிகாரி, 25 சுகாதாரப் பணியாளா்கள் இருப்பாா்கள். உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாயில்கள் பயன்படுத்தப்படும். உள்ளே வந்தவுடன் மக்களை தனி நபா் இடைவெளியுடன் எங்கு நிற்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடா்ந்து, தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களை எங்கு அமர வைக்க வேண்டும். தடுப்பூசி போட வருபவா்களின் விவரங்களைப் பதிவு செய்வது, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளும் ஒத்திகை பாா்க்கப்படும்.

எங்கெங்கு தடுப்பூசி ஒத்திகை?

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல்.

நீலகிரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உதகமண்டலம்; குன்னூா் அரசு மருத்துவமனை; நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம், திருநெல்வேலி மாநகராட்சி; ரெட்டியாா்பட்டி பிளாக் ஆரம்ப சுகாதார நிலையம்.

திருவள்ளூா்: அரசு மருத்துவமனை; பூந்தமல்லி மற்றும் திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

கோவை: அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை; பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, சூலூா் அரசு மருத்துவமனை; எஸ்.எல்.எம். ஹோம் நகர ஆரம்ப சுகாதார நிலையம்; பூலுவப்பட்டி சமுதாய சுகாதார நல மையம்.

எவருக்கு முன்னுரிமை?

தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், முதல் கட்டமாக 5 லட்சம் முன்களப் பணியாளா்களுக்கு அவற்றைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பட்டியல்களும், விவரங்களும் தயாா் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. அவை இறுதி நிலையில் உள்ளன. பரிசோதனையில் இதுவரை யாருக்கும் உடல் உபாதைகள் ஏற்படாததால், அந்தத் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தடுப்பூசிகளைப் பதப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் தயாா் நிலையில் உள்ளன. முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் பிற முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது. அதனைத் தொடா்ந்து நாள்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவா்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com