ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு; ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயம்
ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு; ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயம்

ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு; ஜீப் கவிழ்ந்து 8 பெண்கள் காயம்

தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற ஜீப் ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தலைகுப்புற கவிழ்ந்ததில் 8 பெண்கள் காயமடைந்தனர்.

கம்பம்: தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற ஜீப் ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தலைகுப்புற கவிழ்ந்ததில் 8 பெண்கள் காயமடைந்தனர்.

தேனி மாவட்டம் கோம்பை துரைச்சாமிபுரம் சிவனாண்டி மகன் நதியழகன் (42). இவருக்கு திருமணமாகி மனைவி பிரவீனா மற்றும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நதியழகன் ஜீப் உரிமையாளராகவும் ஓட்டுநராக உள்ளார்.  

இவர் கோம்பையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்வது வழக்கம்.

செவ்வாய்க்கிழமை காலையில் கோம்பையிலிருந்து, கேரளத்துக்கு வேலைக்குச் செல்ல பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பம்மெட்டு வழியாகச் சென்றார்.

இடையில் ஜீப்பை நிறுத்தி தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி ஓய்வெடுத்தார். சக ஓட்டுநர்கள் அவரைப் பார்த்து வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனாலும் நதியழகன் ஜீப்பை எடுத்துக்கொண்டு புளியமலை நோக்கிச் சென்றார். கம்பம்மெட்டு அடுத்து செல்லும்போது திடீரென்று நெஞ்சுவலி அதிகரிக்கவே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், நிலைதடுமாறி அருகே உள்ள சரலைக்கல் குவியலில் ஏறி  ஜீப் கவிழ்ந்தது.

உள்ளே இருந்த பெண் தொழிலாளர்கள் அலறினர், சாலையில் சென்றவர்கள் விரைந்து வந்து கவிழ்ந்த ஜீப் வாகனத்தை மீட்டனர். ஓட்டுநர் இருக்கையில் நதியழகன் மயங்கிக் கிடந்தார்.

அவரை அருகே உள்ள கட்டப்பனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதுபற்றி கம்பம்மெட்டு காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் மதியழகன் உடலை கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு
நெஞ்சுவலியால் நிலைதடுமாறி வாகனத்தை சரளைக்கல் குவியல் மீது ஏற்றியதால் ஜீப் கவிழ்ந்தது. அதே நேரத்தில் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்திருந்தால், ஜீப்பிலிருந்த 8 பெண்களும் உயிரிழந்திருப்பார்கள், பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும். தீவிரமான நெஞ்சு வலியிலும்  8 பேரை காப்பாற்றிய ஓட்டுநர் நதியழகனை பொதுமக்கள் சோகத்துடன் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com