திமுக நிர்வாகிகள் பலர் ஏப்ரல் மாதத்திற்குள் சிறைக்கு செல்வது உறுதி: முதல்வர் பழனிசாமி 

ஊழல் வழக்குகளில் திமுக நிர்வாகிகள் பலர் ஏப்ரல் மாதத்திற்குள் சிறைக்கு செல்வது உறுதி என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
பவானியில் வேனில் இருந்தபடி பிரசாரம் மேற்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பவானியில் வேனில் இருந்தபடி பிரசாரம் மேற்கொள்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


ஈரோடு: ஊழல் வழக்குகளில் திமுக நிர்வாகிகள் பலர் ஏப்ரல் மாதத்திற்குள் சிறைக்கு செல்வது உறுதி என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.                     அவர் ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

பவானியில் பிரசாரத்தை தொடங்கிவைத்த அவர் பேசியதாவது:
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக ஆட்சி தான். ஆனால் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு ஊழல் அரசு என்று சொல்லி வருகிறார். இதற்காக  ஆளுநரை சந்தித்து ஒரு பட்டியல் கொடுத்து உள்ளார். திமுக ஆட்சியில் டெண்டர் படிவம் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே டெண்டரை வழங்கினார்கள். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் இ-டெண்டர் முறையில் யார் வேண்டுமானாலும் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை.

என் மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கிறார். 2ஜி வழக்கில் உங்கள் மீது தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. 

கருணாநிதி வரும்போது என்ன கொண்டுவந்தார். ஆனால் இப்போது அவரது குடும்பத்திற்கு மட்டும் 52 சொத்துகள் உள்ளன. திமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றம் சென்று வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  சுரேஷ்ராஜன், சுப.தங்கவேலன், ரகுபதி உள்ளிட்டோர் மீது 30 வழக்குகள் உள்ளன. இத்தனை ஆண்டுகளாக வாய்தா வாங்கிக்கொண்டிருந்தனர். இப்போது வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இப்போதுள்ள திமுக நிர்வாகிகள் பலரும் ஏப்ரல் மாதத்திற்குள் வழக்கு முடிந்து சிறைக்கு செல்வது உறுதி.

மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு மீது தவறான தோற்றத்தை உருவாக்கி முயற்சித்து வருகிறார். திமுக குடும்ப கட்சியாக இருந்து கொண்டு வாரிசு அரசியல் நடத்துகின்றனர். 

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தாத்தா, மகன், பேரன் என்று வரிசையாக வருகின்றனர். ஆனால் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். அதற்கு நானே சாட்சி. 

மக்கள் சபை என்ற பெயரில், மக்களை ஏமாற்றும் செயலில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்கு திமுக துடிக்கிறது. 

விஞ்ஞான உலகில் மக்கள் இருப்பதை மறந்து மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். அதனால் மக்களை ஏமாற்ற முடியாது.

எனவே மக்கள் சிந்தித்து பார்த்து சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com