பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நாளைக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை

பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

நேரடி வகுப்புகள் நடைபெறாத சூழலில் நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுமா என பரவலாக கேள்விகள் எழுந்தன.

அதேவேளையில் இந்த வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தாா். அதன்படி முதல் கட்டமாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைகளுக்குப் பின் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

அதற்காக பள்ளிகள் திறப்பு குறித்து ஜன.8-ஆம் தேதி வரை தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் துரிதமாக நடைபெற்றது. 

முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் காணொலி மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் ஆணையர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து புதன்கிழமை முதல்(ஜன.6 முதல் ஜன,8 வரை) கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி முடிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும்.

காலை 9 மணி முதல் மாலை வரை நாள் ஒன்று 100 பொற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும். 

பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோா்கள் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com