என்.எல்.சியில் மண்ணின் மைந்தருக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

என்.எல்.சியில் மண்ணின் மைந்தருக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ்.
ராமதாஸ்.

என்.எல்.சியில் மண்ணின் மைந்தருக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) தொழில் பழகுநர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வழங்குவதை 26 ஆண்டுகளாக என்.எல்.சி நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது. ஐ.டி.ஐ. படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க என்.எல்.சி நிர்வாகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சியில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்து பணிக்காக காத்திருப்போரில் 99 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள் ஆவர். என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்கள், முன்னாள் பணியாளர்களின் வாரிசுகள் என அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் என்.எல்.சியுடன் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களுக்கு பணி வழங்க வேண்டியக் கடமை என்.எல்.சி நிறுவனத்துக்கு உள்ளது. ஆனால், தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடலூர் மாவட்ட பூர்வக்குடிமக்கள் தங்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களை விட்டுக் கொடுத்து, அதில் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் கடைநிலை பணியைக் கூட மண்ணின் மைந்தர்களுக்குக் கொடுக்காமல் எங்கிருந்தோ கூட்டி வரப்பட்டவர்களுக்கு தாரை வார்ப்பதை என்.எல்.சி நிறுவனம் வாடிக்கையாக்கிக் கொண்டால் அதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, என்.எல்.சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படிப்பு மற்றும் தொழில் பழகுநர் பயிற்சியை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட பணிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை விவரங்களை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும். அந்த இடங்களை வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் நிரப்ப வேண்டும். இனி வரும் காலங்களில் அதிகாரிகள் அல்லாத பணிகளை மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய என்.எல்.சி நிர்வாகம் தவறினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com