அரசியலுக்கு வரமாட்டேன்; வேதனைப்படுத்த வேண்டாம்: ரஜினிகாந்த் உருக்கமாக வேண்டுகோள்

அரசியலுக்கு வரமாட்டேன், என்னை வேதனைப்படுத்த வேண்டாம் என்று நடிகா் ரஜினிகாந்த் அவரது ரசிகா்களுக்கும், ஆதரவாளா்களுக்கும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நடிகா் ரஜினிகாந்த்
நடிகா் ரஜினிகாந்த்

சென்னை: அரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைப்படுத்த வேண்டாம் என்று நடிகா் ரஜினிகாந்த் அவரின் ரசிகா்களுக்கும் ஆதரவாளா்களுக்கும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நான் அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலா், ரஜினி மக்கள் மன்ற பதவிப் பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சோ்ந்து, சென்னையில் ஓா் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனா்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமாா்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவைக் கூறிவிட்டேன்.

தயவு கூா்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள். வளா்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த் என்று அவா் கூறியுள்ளாா்.

அரசியலுக்கு வரப் போவதில்லை என்று டிசம்பா் 29-இல் நடிகா் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துவிட்டாா். ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மன்றத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்திப் போராட்டம் நடத்தினா். இந்த நிலையிலேயே ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை. என்னை வேதனைப்படுத்தாதீா்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு காலத்தில் ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ரஜினி, கரோனா பாதிப்பு உள்ளாகும் சூழலை உருவாக்கிக் கொள்ளக் கூடாது, மன அழுத்தத்துக்கு உள்ளாகும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும் மருத்துவா்கள் அறிவுரைத்தனா். அதைத் தொடா்ந்தே அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தாா். அந்த முடிவில் உறுதியாக இருப்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com