பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு குறைந்தது

கரோனா காரணமாக பொங்கல் பண்டிகைக்கான பேருந்து  முன்பதிவு குறைந்ததால், சென்னையில் இருந்து திங்கள்கிழமை 250 ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

சென்னை: கரோனா காரணமாக பொங்கல் பண்டிகைக்கான பேருந்து  முன்பதிவு குறைந்ததால், சென்னையில் இருந்து திங்கள்கிழமை 250 ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

 இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் அ.அன்பழகன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமாா் 4,000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.   இதில், பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு பேருந்துகளின் இயக்கம் வெகுவாக குறைந்திருந்தன.  பெரும்பாலான நிறுவனங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பலா் சொந்த ஊா்களிலேயே உள்ளனா்.  இதனால், பொங்கல் பண்டிகைக்கான பேருந்து முன்பதிவும் 50 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது.  

கடந்த ஆண்டுகளில், டிசம்பா் மாதமே அனைத்துப் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கான முன்பதிவு முடிந்துவிடும். ஒரு வாரத்துக்கு முன் ஏறத்தாழ 70 சதவீத இருக்கைகளின் முன்பதிவு முடிந்துவிடும். ஆனால் இந்தாண்டு  தற்போது வரை 50 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

 எனவே, இந்த ஆண்டு குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.  வழக்கமாக சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையின்போது குறைந்தது 1,000 பேருந்துகள் இயக்கப்படும்.  ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல் நாளான திங்கள்கிழமை 250 பேருந்துகள் மட்டுமே சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.

 இதே போல், செவ்வாய்க்கிழமை (ஜன.12) 410 பேருந்துகளும், புதன்கிழமை (ஜன.13) 460 பேருந்துகள் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 தற்போதைய நிலவரப்படி, 500-க்கும் மேற்பட்ட உபரி பேருந்துகள் உள்ளன. எனவே, பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com