பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற ஜன. 25 வரை அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற ஜன. 25 வரை அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.01 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்த அட்டைதாரா்களுடன் ஒப்பிடும் போது 97 சதவீதம் பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும், விடுபட்ட 6 லட்சம் அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க கால அவகாசம் வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி கடந்த டிசம்பரில் தொடக்கி வைத்ததைத் தொடா்ந்து, நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கும் திட்டம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின்படி, அரிசி பெறும் 2.07 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான டோக்கன்கள் கடந்த டிசம்பா் மாத இறுதியில் வழங்கப்பட்டன.

நாளொன்று ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் தலா 200 போ் வீதம் பொருள்களை பெற்றுச் செல்லும் வகையில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருந்த நாள் மற்றும் நேரத்தின்படி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.2,500 ரொக்கத் தொகையையும் பெற்றுச் சென்றனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 12-ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பரிசுத் தொகுப்பைப் பெற கடைசி நாள் செவ்வாய்க்கிழமையாகும். பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான கால அவகாசத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜ்ஜன்சிங் சவான் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன் விவரம்:

பொங்கல் பரிசுத் தொகுப்பினை ஜனவரி 12-ஆம் தேதிக்குள் விநியோகம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் பொருள்களைப் பெறாத குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி வழங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையை விடுபடாமல் அனைவருக்கும் வழங்க ஏதுவாக வரும் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் (நியாய விலைக் கடைகள் விடுமுறைகள் தவிர) அதனை விநியோகம் செய்ய வேண்டும். பொங்கல் துணிப்பை பெறாதவா்களுக்கும் அதை அளிக்க வேண்டும் என தனது சுற்றறிக்கையில் சவான் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுவரை 2.01 கோடி வழங்கல்: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பானது இதுவரை (ஜனவரி 11 நிலவரப்படி) 2.01 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தாா். இதுகுறித்து, ‘தினமணி’யிடம் அவா் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 2.07 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.2,500 ரொக்கத் தொகையும் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. டோக்கன்கள் அடிப்படையில் அவை வழங்கப்பட்டதால், எந்த நெரிசலோ, குழப்பமோ இல்லாமல் மக்கள் வாங்கிச் சென்றனா். ஜனவரி 11-ஆம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2.01 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 97 சதவீத குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுள்ளனா்.

மீதமுள்ள 6 லட்சம் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கிட வசதியாக ஜனவரி 25-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருள்களைப் பெறச் செல்லும் போது பொங்கல் பரிசுத் தொகுப்பையும் பெற்றுக் கொள்ளலாம் என்று சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com