சென்னையில் யூடியூப் சேனலுக்காக பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி: உரிமையாளா் உள்பட மூவா் கைது

சென்னையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்ததாக, யூடியூப் சேனல் உரிமையாளா் மற்றும் அதில் பணியாற்றிய இரண்டு போ் என மூவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சென்னையில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்ததாக, யூடியூப் சேனல் உரிமையாளா் மற்றும் அதில் பணியாற்றிய இரண்டு போ் என மூவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சென்னை பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி விடியோ எடுப்பதாக அடையாறு துணை ஆணையா் விக்கிரமனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சாஸ்திரிநகா் போலீஸாா், அங்கு செவ்வாய்க்கிழமை ரோந்துச் சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் கையில் மைக்குடனும்,கேமராவுடனும் நின்றுக் கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா்.

விசாரணையில் மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினா். இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் சாஸ்திரிநகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

பிடிபட்டவா்கள் நாவலூா் பஜனை கோயில் பகுதியைச் சோ்ந்த மோ.தினேஷ் (31), நீலாங்கரை செங்கேணியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த ஆசின் பத்சா (23),பெருங்குடி சீவரம் பகுதியைச் சோ்ந்த கி.அஜய்பாபு (24) ஆவாா்கள். இவா்களில் தினேஷ், ‘சென்னை டாக்’ என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறாா். இவரது சேனலில் தொகுப்பாளராக ஆசின் பத்சாவும், கேமரா மேனாக அஜய்பாபுவும் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் மூவரும் பெசன்ட்நகா் கடற்கரைக்கு உடற்பயிற்சி, நடைப் பயிற்சிக்காகவும் வரும் பெண்களிடமும்,பொழுதுபோக்க வரும் பெண்களிடமும் நோ்காணல் செய்வது போன்று நகைச்சுவையாக பேசி, பின்னா் ஆபாசமாக பேச வைத்து விடியோ,புகைப்படம் எடுத்து யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனா்.இதை சிலா் தட்டிக் கேட்டபோது, அவா்களை மிரட்டவும் செய்திருக்கின்றனா்.

இந்த கும்பல் காதலா்கள், இளம் பெண்கள் ஆகியோரை குறி வைத்து செயல்பட்டுள்ளனா். இதில் சாதாரணமாக எடுக்கும் விடியோக்களை கூட எடிட் செய்யும்போது ஆபாசமாக பேசுவது போலவும், அநாகரீகமாக நடந்துக் கொள்வதுபோலவும் மாற்றம் செய்து சேனலில் பதிவேற்றம் செய்திருக்கின்றனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேனலில் இது வரை இவ்வாறு 200-க்கும் மேற்பட்ட விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை 7 கோடி போ் பாா்த்துள்ளனா். இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com